தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது! – விஷால் திட்டவட்டம்! – AanthaiReporter.Com

தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது! – விஷால் திட்டவட்டம்!

 கோலிவுட்டில் நடந்து வரும்  வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும், முதலமைச்சரை பேரணியாக சென்று சந்தித்து முறையிடத் திட்டமிட்டிருப்பதாகவும்  தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிட்டு வரும் க்யூப் (Qube), யுஎஃப்ஓ (UFO) ஆகிய  நிறுவனங்களின் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், திரையுலகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும், அதுவரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது என்றும் தெரிவித்தார். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.இந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்ரிகையாளர் சந்திப்பில்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்  சங்க   விஷால் , பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி , தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி .சி. ஸ்ரீ  ராம் , இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது  தங்கள் தரப்பை விளக்கிய விஷால், “சினிமா துறையை சீரமைக்கவும், திரையரங்கு களில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் பட அதிபர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்கிறோம். டிஜிட்டல் சேவை அமைப்புகள் தியேட்டர்களில் வைத்துள்ள புரொஜக்டர்களுக்கு 10 வருடமாக தயாரிப்பாளர்கள் தவணை தொகையை செலுத்தி உள்ளோம்.

புரொஜக்டர்களுக்கு பட அதிபர்களிடம் பணம் வாங்குவது முறையல்ல. தியேட்டர்களில் கட்டண உயர்வால் கூட்டம் குறைந்துள்ளது. முதல் வரிசைக்கும், கடைசி வரிசைக்கும் ஒரே கட்டணம் வாங்குகின்றனர். ஏழைகளால் அதிக தொகை கொடுத்து படம் பார்க்க முடியவில்லை. பெரிய படங்களுக்கும், சிறிய படங்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிறு பட்ஜெட் படங்களுக்கு கட்டணத்தை குறைக்க சொல்கிறோம். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்துக்கு அந்த பணம் போவதை அனுமதிக்க முடியாது. இதன் காரணமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. அதை ரத்து செய்யவேண்டும்.
தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். இதன்மூலம் ஒரு படத்தின் மொத்த வசூலும் தெரியவரும். அதை வைத்து நடிகர்கள் சம்பளத்தையும் தீர்மானிக்க முடியும். இந்த கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்களுடன் ஆலோசித்தோம். ஆனால் தீர்வு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறுவது வரை வேலை நிறுத்தம் தொடரும். இதை வேலை நிறுத்தம் என்று சொல்வதைவிட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என்றே கருதுகிறோம்.   தமிழ்  சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது.
இந்த பிரச்சினையை அரசிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். வருகிற புதன்கிழமை (4-ந் தேதி) திரையுலகினர் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்ல இருக்கிறோம்.
ஊர்வலம் முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் சந்தித்து திரையுலக பிரச்சினையை தீர்க்கக்கோரி மனு கொடுப்போம். இந்த ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள்.