மாலத்தீவில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு விசா அவஸ்தை! – AanthaiReporter.Com

மாலத்தீவில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு விசா அவஸ்தை!

மாலத்தீவில் 29,000 இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் மாலத்தீவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான விசா தேதிகள் முடிவடையும் பொழுது புதுப்பிக்க வேண்டாம் என மாலத்தீவு அதிபர் யாமின் கண்டிப்பாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல புதிதாக பணியில் சேர 2,000 பேர் விசா கோரி விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். அந்த விண்ணப்பங்களின் கதி என்ன என்று தெரியாமல் இந்திய தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

2015ம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே சிறப்பான சுமூகமான உறவு இருந்தது. அப்பொழுது மாலத்தீவில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் இந்தியர்களைத் தேடிப்பிடித்து தொடர்பு கொண்டு பணியில் அமர்த்த உதவினர்.
2015ல் பாஜக அரசு பொறுப்பேற்றப்பிறகு மாலத்தீவு உள்நாட்டு அரசியல் தொடர்பான கருத்து ஒன்றை இந்தியா வெளியிட்டது. மாலத்தீவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.

இது ஜனநாயகத்திற்கு எதிரானது என மாலத்தீவுக்கு நிச்சயித்த பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்தார். அது முதல் மாலத்தீவு அரசின் மனநிலை மாறிவிட்டது.

மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களின் விசா காலம் முடிவடைவதை சுட்டிக்காட்டி விசாவை நீடிக்க கோரினால்கூட பதில் கிடைப்பதில்லை.

இதுகுறித்து வெளிப்படையாக மாலத்தீவுடன் பேச இந்திய வெளியுறவுத்துறை விரும்பவில்லை. தூதரகங்கள் மூலமாக தொடர்பு கொண்டு பேச்சு நடத்துகிறோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.

டில்லியில் உள்ள மாலத்தீவு தூதரகமும் இந்தியர்களுக்கு விசா கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என கூறுகிறது. விசா கிடைக்காமல் இந்திய தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர் என்று கூறுவது கட்டுக்கதை.

மாலத்தீவு தூதரகத்தில் உள்ள உயர் அதிகாரி ஹசன் ஹலீல் கூறினார்.

மாலத் தீவின் பாதுகாப்புக்கும் வெளிநாட்டு கப்பல்கள் மாலத்தீவுக்கு வருவதை கண்காணிக்கவும் இந்தியா இரண்டு ஹெலிகாப்டர்களையும் அதிவேக படகுகளையும் மாலத்தீவில் நிறுத்தி வைத்துள்ளது.

இவற்றை மாலத்தீவு அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஹெலிகாப்டர்களின் பைலட்டுகளும், அதிவேக படகுகளின் பைலட்டுகளும் விசா முடிவடையும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கும் மாலத்தீவு அரசாங்கம் விசாவை நீடிக்கவில்லை என்றால் இந்திய ஹெலிகாப்டர்களும் அதிவேக படகுகளும் இந்தியா திரும்பிவிடும்.