“வினாயகர் சதுர்த்தி திருநாளை மதங்களை கடந்த மனிதநேய திருநாளாக கொண்டாடலாமே..?” – AanthaiReporter.Com

“வினாயகர் சதுர்த்தி திருநாளை மதங்களை கடந்த மனிதநேய திருநாளாக கொண்டாடலாமே..?”

“வினாயகர் சதுர்த்தி” திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடப் போகும் எனதருமை சகோதர, சகோதரிகளே ஒரு நிமிடம் உங்கள் கண்களை கடனாகத் தாருங்கள். வேறெதற்குமில்லை இந்த பதிவை பொறுமையாக புரிந்து கொண்டு படிப்பதற்கு தான்.

இந்துக்களின் வாக்கிற்காக மட்டும் நமது வாசல்படிகளை மிதிக்கும் அரசியல்வாதிகளுக்கும், பகுத்தறிவு பேசுகிறோம் என்கிற பெயரில் இந்துக்களின் மனதை தொடந்து புண்படுத்தி வரும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மத்தியில் வினாயகர் சதுர்த்தியை கொண்டாடும் நாம் இதுவரை சாதித்தது என்ன? பெற்றது என்ன? என்பதை ஒரு நிமிடமாவது சிந்தித்துப் பார்த்தோமா? என்றால் இல்லை என்றே எனது சிற்றறிவிற்கு தோன்றுகிறது.

ஏனெனில் நேற்று வரை வயல்வெளிகளில் இருந்த களிமண்ணை அள்ளிக் கொண்டு வந்து அதனைக் கைவினைக் கலைஞர்கள் வணிக ரீதியில் வினாயகராக்கி வணிகம் செய்ய, அதனை நாமும் வாங்கி வந்து தெருவிற்கு தெருவும், வீடுகள் தோறும் வைத்து வழிபாடு செய்கிறோம். அவ்வாறு வழிபாடு செய்வதில் மகிழ்ச்சி தான்.

ஆனால் காலையில் வாங்கி வந்து வழிபாடு முடிந்ததும் சில மணி நேரங்களிலோ அல்லது மாலையிலோ ஏதேனும் ஒரு சாலை ஓரங்களில் இருக்கும் கோவில்களிலோ அல்லது தெரு வோரங்களில் பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கும் வினாயகப் பெருமானின் காலடியிலோ நாம் வீட்டில் வைத்து வழிபாடு செய்த வினாயகப் பெருமானை கேட்பாரற்று அனாதையாக விட்டு விட்டு சென்று விடுகிறோம். “களிமண்ணில் இருந்து கைவிணைக் கலைஞர்களால் அவதாரம் எடுத்த வினாயகப் பெருமான் மீண்டும் களிமண்ணாகி, அனாதையாகி கண்டவர் கால்களில் எல்லாம் மிதிபடத் தொடங்கி விடுகிறார்”.

அதுமட்டுமா வினாயகர் சிலைகளை கடலிலும், ஆறு, குளங்களிலும் கரைக்கிறோம் என்கிற பெயரில் காலால் மிதித்து ருத்ர தாண்டவமாடி விநாயகரை அவமதித்தோடு, ஆறு, குளங்கள், கடல் உள்ளிட்ட நீர் நிலைகளை மாசுபடுத்தி, அதன் பிறகு நீரில் கரைந்து போன வினாயகப் பெருமான் சிலைகளின் மிச்சங்கள் மீதே நாம் நமது நடை பயணத்தை தொடர்கிறோம்.

ஏற்கெனவே பெரும்பாலான தெருக்களிலும் இந்துக்களின் ஆலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும், தெருவைப் பார்த்து வாசற்படி அமைந்திருக்கும் இல்லங்களின் வாசற்படி அருகிலும் வினாயகப்பெருமான் அமர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

வினாயகர் இல்லாத ஆலயங்களே உலகில் இல்லை என்கிற நிலை இருக்கும் போது சாலை மற்றும் தெருக்களின் ஓரங்களில் தனியாக வினாயகப்பெருமானுக்கு சிலை வைத்து உருவ வழிபாடு செய்து விட்டு, ஒரே நாளில் அவரை அவமானப்படுத்துவது சரியா? என்பதை இனியாவது நாம் சிந்திக்க வேண்டும்.

வினாயகப்பெருமானுக்கு தனியாக சிலை வைத்து உருவ வழிபாடு செய்வதை விட வினாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அவரவர் சக்திக்கேற்ப சமபந்தி விருந்தோடு, மதங்களை கடந்த மனிதநேய திருநாளாக கொண்டாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வினாயகர் சதுர்த்தி திருநாளை மதங்களை கடந்த மனிதநேய திருநாளாக கொண்டாடுவதால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்கிற பாகுபாடின்றி நாம் அனைவரும் இனத்தால் இந்தியர்கள், உணர்வால் தமிழர்கள் என்கிற நிலை உருவாகும். அது பிற மதத்தினருக்கும் ஒரு முன் மாதிரியான விழாவாகவும் இருக்கும்.

இது நடக்குமா எனத் தெரியவில்லை…? ஆனால் நடக்க வேண்டும். நடந்தால் நாட்டில் மிகப்பெரிய நன்மைகள் விளையும். மதத்தின் பெயரால் நம்மை பிரித்தாள நினைக்கும் அரசியல் தீய சக்திகளின் எண்ணங்கள் எல்லாம் தவிடு பொடியாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

விடிகின்ற பொழுது அனைவருக்கும் நலமாக விடியட்டும்.

எம்பெருமான் வினாயகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

பாரதம் எனும் குடும்பத்தில் மூத்த குடியாக விளங்கும் இந்து சமய பெருமக்கள் அனைவருக்கும் இனிய வினாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் உள்ளபடியே உள்ளம் மகிழ்கிறோம்.

சு.ஆ.பொன்னுசாமி