விஜயகாந்த சென்னையில் நாளை பிரச்சாரம் செய்கிறார் : ஆனா பேச மாட்டார்..? – AanthaiReporter.Com

விஜயகாந்த சென்னையில் நாளை பிரச்சாரம் செய்கிறார் : ஆனா பேச மாட்டார்..?

பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

கடந்த சில தேர்தலில் சூறாவளிப் பரப்புரை செய்து தனிக் கவனம் பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் தொடர் சிகிச்சை பெற்றப்ப்படி ஓய்வில் இருக்கிறார். அண்மைய் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்கள் முன் சென்னை திரும்பினார்.

அவரின் உடல்நலம் நன்கு தேறிவிட்டது பிரச்சாரத்துக்கு வருவார் என தேமுதிக தரப்பில் தெரிவித்தாலும், கூட்டணிப் பேச்சு வார்த்தை, தலைவர்கள் சந்திப்பு உள்ளிட்ட விவகாரங்களை பிரேமலதாவும், சுதீஷும் செய்து வந்தனர்.கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடும் நேரத்தில் விஜயகாந்தை அழைத்து வந்து அமர வைத்தனர். செய்தியாளர்கள் பேசச்சொன்னபோது தொண்டையைக் காட்டி சரியில்லை என்று சைகையால் சொன்னார். பின்னர் அவர் பிரச்சாரத்துக்கு வருவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி இதுதொடர்பாக, தேமுதிக சார்பில் வெளியான அறிவிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், விஜயகாந்த், நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து முரசு சின்னத்திலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை இரட்டை இலை சின்னதிலும், பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து மாம்பழம் சின்னத்திலும் நாளை (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை மூன்று நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் மூன்று தொகுதிகளுக்கு வேனில் ஊர்வலமாக வருவார்.. முடிந்தால் ஆங்காங்கே கை ஆட்டுவார். ஆனால் எதுவும் பேசமாட்டார் என்றும் ஒரு தரப்பு செய்தி கூறுகிறது.