தமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி! – AanthaiReporter.Com

தமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி!

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக தற்போதுள்ள இந்திரா பானர்ஜி, விரைவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட் கொலிஜியம், இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க பரிந்து ரைத்த நிலையில், தமிழகத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 இருந்துவரும் நிலையில், செலமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் ஓய்வு பெற்றதால், தற்போது நீதிபதிகள் எண்ணிக்கை 22 ஆக இருந்துவருகிறது. மீதமுள்ள 9இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப், ஏ.பி.சிக்ரி ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழுவின் கூட்டம் கடந்த 16ஆம் தேதி டெல்லியில் கூடியது.

கூட்டத்தில், உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. ஜோசப்பை நியமிக்கும் பரிந்துரையையும், மற்ற நீதிபதிகளின் பரிந்துரையையும் கொலிஜியம் குழு தனித்தனியாக அனுப்புவதாக கொலிஜியம் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த இவர், தற்போது இடைக்கால தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். பதவி உயர்வு பெற்று தற்போது சென்னை ஐகோர்ட்லைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1958ஆம் ஆண்டு பிறந்த விஜயா கமலேஷ் தஹில் ரமணி, 1982ஆம் ஆண்டு மஹாராஷ்டிர பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். கே.சி சட்டக்கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள அவர், அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு சிவில், குற்றவியல் வழக்குகளிலும் ஆஜராகி திறம்பட வாதத்தை எடுத்து வைத்துள்ளார்.