இயக்குநராக இருந்தாலும் வீணை என்ற அடைமொழியுடன் வாழ்ந்து சாதித்த எஸ். பாலச்சந்தர்! – AanthaiReporter.Com

இயக்குநராக இருந்தாலும் வீணை என்ற அடைமொழியுடன் வாழ்ந்து சாதித்த எஸ். பாலச்சந்தர்!

?குருவே இல்லாத சுயம்பு ?வீணை பாலச்சந்தர் மறைந்து இன்றோடு 27 வருஷங்கள் ஓடிப் போச்சு.?

?வக்கீல் மகனாக வசதியான குடும்பத்தில் பிறந்த பாலச்சந்தர் குட்டிப் பையனா இருக்கறச்சேயே வித்தியாசமான குணம்கொண்டு வளர்ந்தார் சின்ன வயதியே தனி ஸ்டைலில் ரசிக்கும் விதத்தில் பல்வேறு வாத்தியக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்டிருந்தார்.

1934ம் ஆண்டில் ஏழு வயதுச் சிறுவனாக இருந்த பாலசந்தர் ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தில் நடிச்சார். இசைக்கலையில் தேர்ச்சி கொண்டிருந்த அவருக்கு அப்போது வயது 7. அந்த வயதிலேயே வீணை, தபேலா, மிருதங்கம், ஆர்மோனியம், புல்புல்தாரா, தில்ருபா, சிதார் மற்றும் ஷெனாய் போன்ற இசைக்கருவிகளை ஸ்ருதி சுத்தமாக வாசிக்கப் பழகிட்டார்-அதுவும் தானாகவே.

அதுனாலே ஃபேமிலி பிரண்ட் எடுத்த ‘சீதா கல்யாணம்’ படப்பிடிப்பின்போது, ராவணன் அவையில் வீணை வாசிக்கும் வேடம் பாலச்சந்தருக்கு. அப்போது இயக்குநர் சாந்தராம் கஞ்சிராவை வாசிக்குமாறு நடிக்கச்சொல்ல நிஜமாகவே வாசித்துள்ளார் பாலச்சந்தர். படமெடுக்க மறந்துபோய், இசையில் மயங்கிய இயக்குநர் சொன்ன வார்த்தை, ‘ராவணன் அரசவையில் உள்ளது போலவே உணரச் செய்துவிட்டான் இந்தச் சிறுவன்” என்று, ராவணன் மிகச்சிறந்த வீணை வித்வான் என இராமாயணம் குறிப்பிடுவதால் அப்படிச் சொல்லி பாராட்டியுள்ளார். அதன்பின்னர், ஒரு சாக்பீஸால் சிறுவன் பாலச்சந்தரைச் சுற்றி வரைந்து ‘இதைத்தாண்டி வரக்கூடாது’ என செல்லமாக உத்தரவிட்டே படம் பிடித்தாராம்.

சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சில் நிறைய நடிச்ச பாலசந்தர், தன்னோட 21 வயசிலேயே ‘இது நிஜமா’ -ங்கற படத்தில் நாயகனாக நடித்தார். தமிழில் வெளியான முதல் இரட்டைவேடத் திரைப்படம் இது. தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களின் முன்னோடியான பாலசந்தர், நாயகனாக நடித்த முதல் படமும் ஒரு பேய்ப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழ் சினிமா வரலாற்றில் 21 வயதில் ‘கன்னிராசி’ படத்தை பாண்டியராஜன் இயக்கும்வரை எஸ்.பாலசந்தர்தான் மிகச்சிறிய வயதில் சினிமாவை இயக்கியவர். ‘என் கணவர்’ என்ற படத்தை இயக்கியபோது அவரின் வயது 23. ஆனாலும் ‘அந்த நாள்’ படம்தான் இவரின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியது. அந்தக் காலத்திலேயே புரட்சிகர கதை அமைப்புடன், பாடல்களே இல்லாமல் வெளிவந்து வெற்றிபெற்ற படம் இது. ஏவி.எம். தயாரிப்பான இப்படத்தில் சிவாஜி நடித்திருந்தார். அகிரா குரோசவாவின் ‘ரஷோமான்’ பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். ராஜதுரோகியாக மாறும் அங்கீகரிக்கப்படாத இஞ்சினியராக நடித்திருந்த சிவாஜி, அவரின் துரோகத்துக்காக கொலை செய்துவிடும் மனைவியாக பண்டரிபாய் என அனைவரும் அற்புதமாக நடித்திருப்பார்கள்.

அதன்பிறகு அவனா இவன்?, பெண், போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும், புது நடிகர்களை நடிக்கவைத்து ‘பொம்மை’ என்ற சஸ்பென்ஸ் படத்தை எடுத்தார். இது, இவரது சொந்தப் படம். கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என எல்லாப் பொறுப்பையும் ஏற்றார். படம் வெளிவந்த போது எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களும் வந்தன. ஆனால், இவர் படம் மட்டுமே வெற்றிபெற்றது. சென்னை கெயிட்டி தியேட்டரில் 100 நாட்கள் கடந்து ஓடியது. இந்தப்படம் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,

“ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் பொம்மை படம். 1964ல் வெளிவந்த இப்படத்தில் ஒரு பொம்மைக்குள் வெடிகுண்டை வைத்து ஒருவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அந்த பொம்மை கைமாறிப் போய்விடுகிறது. அதைத் தேடியலைகிறார்கள் என்ற எளிய கதையை தனது திரைக்கதையின்வழியே மிக சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் பாலசந்தர்.

படத்தின் துவக்கத்தில் ஒரு மவுத் ஆர்கன் வாசிக்கும் காட்சி அறிமுகமாகிறது. அந்த இசை சிலிர்ப்பூட்டக்கூடியது. படத்தின் முக்கிய கதாபாத்திரமாக பாலசந்தரே நடித்திருக்கிறார். அவரது நடிப்பு அலாதியான ஒன்று. முகபாவங்களை வெளிப்படுத்தும் முறையும், நடையில் அவர் காட்டும் நளினமும், பேசும்போது ஸ்டைலான ஆங்கிலம் கலந்து பேசும்முறையும், உடையமைப்பும், யார் சாயலுமற்ற தனிவகை நடிப்பாகவே இருக்கிறது. பொம்மை படத்தின் ஆரம்பக் காட்சியில் அவர் நடந்துவந்து தனது சிங்கப்பூர் பயணத்தைப் பற்றி பேசும்போதே படம் வித்தியாசமான ஒன்று என்று பார்வையாளர்களுக்குப் புரிந்துவிடுகிறது.

படத்தின் பின்ணணி இசை சிறப்பானது. எந்த இடத்தில் இசையே இல்லாமல் நிசப்தமாக விடவேண்டும் என்பதை அவர் சரியாக உணர்ந்திருக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய படங்களில் காணப்படுவதுபோல செயற்கையான பின்னணி இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசைக்கோர்ப்பு அவருடையது.

பொம்மை படத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற ஜேசுதாசின் பாடல் உள்ளது, ஜேசுதாசின் முதல்பாடலது. சாலையோர பிச்சைக்காரன் பாடும் பாடலது, பாடலின் வரிகள் கதையோடு இணைந்துசெல்லும் அதேவேளையில் ஆழ்ந்த துயரத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது, அப்பாடலை ஜேசுதாஸ் பாடும்முறை கேட்பவரை மெய்மறக்கச் செய்யக்கூடியது.

பொம்மை படத்தில் ஐம்பது வருடத்தின் முந்தைய சென்னை நகரின் காட்சிகளைக் காண்பது வேடிக்கையாக இருக்கிறது. கூட்டமேயில்லாத விமான நிலையத்தில் பயணிகளை மலர்க்கொத்து தந்து வழியனுப்ப வந்தவர்கள், அன்றைய டாக்சிகள். பரபரப்பில்லாத சாலைகள், அக்கால பேஷன் உடைகள், உணவகங்கள். சாலையோர மனிதர்கள், சென்னையின் கடந்தகாலத்தைக் காண்பது உவப்பாகவே இருக்கிறது.

வழக்கமான டுயட் பாடல்காட்சிகளை ஒருபோதும் பாலச்சந்தர் பயன்படுத்தவேயில்லை. பி.சுசிலா பாடி விஜயலட்சுமி நடனமாடியுள்ள ‘எங்கோ பிறந்தவராம்’ பாடலும், ‘தத்தி தத்தி நடந்துசெல்லும் தங்கபாப்பா’ பாடலையும் எஸ்.பாலச்சந்தர் படமாக்கியவிதம் மாறுபட்டதாகவே இருக்கிறது. அப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஓபன் சஸ்பென்ஸ் வகையைச் சேர்ந்தது. பார்வையாளர் களுக்கு பொம்மையில் வெடிகுண்டு இருப்பது தெரிந்துவிட்டது. ஆனால், கதாபாத்திரங்களுக்குத் தெரியாது. எந்த நிமிசம் குண்டு வெடிக்கப்போகிறது என்ற சரடை விறுவிறுப்பாகக் கையாளும் விதத்தில் திரைக்கதையமைப்பின் உச்சநிலையை உருவாக்கிக் காட்டுகிறார்.

பொம்மை படத்தின் இறுதிக் காட்சியில் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு பாலசந்தர் தனது படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்துகிறார், இன்றுவரை யாரும் மேற்கொள்ளாத புதிய முயற்சியது, அந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகிய ஜேசுதாஸ் வருகிறார், மெலிந்துபோய் ஒரு மாணவனைப்போல நிற்கும் ஜேசுதாஸின் உருவமும் அருகில் நிற்கும் சாந்தமான பி.சுசிலாவும், துடிப்பான எல்.ஆர்.ஈஸ்வரியும் காணக்கிடைக்காத காட்சியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின், இவர் எடுத்த ‘நடு இரவில்’ என்ற திரில்லர் படமும் வெற்றிபெற்றது. ஆனாலும் சினிமா இயக்கத்தில் இருந்த நாட்டத்தை தள்ளிவைத்து. வீணை வித்வானான தன்னை அதில் திறமை முழுவதையும் ஒருங்கே கொண்டு செலுத்தினார்.  இயக்குநராக இருந்தாலும் வீணை என்ற அடைமொழியுடன் கடைசி வரை வாழ்ந்து சாதித்த இவர் இன்றைய சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்க்கு இதே நாள் 1990ம் ஆண்டு வீணைக் கச்சேரிக்காகச் சென்றிருந்தபோது அங்கேயே காலமானார்.

அவரின் மறைவுநாளான இன்று, “நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் வீணை கிடைத்தது. நிறைய பாவம் செய்திருக்க வேண்டும். அதனால் சினிமா வாய்த்தது” எனக்கூறிய அவரின் நினைவை இப்போதைய இயக்குநர்கள் கொள்ள வேண்டியது அவசியம்