பா.ஜ. க. வின் பிதாமகன் வாஜ்பாய் உடல் தகனம்

பா.ஜ. க. வின் பிதாமகன் வாஜ்பாய் உடல் தகனம்

பாஜக ஸ்தாபகரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் புது டெல்லி ராஜ்காட்-விஜய்காட் பகுதியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் இன்று மாலை 5 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமிதா கவுல் பட்டாசார்யா வாஜ்பாய் சிதைக்கு தீ மூட்டினார்.

நேற்று -ஆகஸ்ட் 16ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் இன்று காலை 9 மணியளவில் பாஜக தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அதன் பின் வாஜ்பாய் உடல் மதியம் 1.45 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் ஊர்வலமாக புதுடில்லியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிர்தி ஸ்தலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி சடங்கு செய்யவும் நினைவிடம் அமைக்கவும் மத்திய அரசு ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது.

ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலத்துக்கு வந்த வாஜ்பாய் உடலுக்கு மாலை 4.30 மணியளவில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
வாஜ்பாய் உடல் மேல் போர்த்தியிருந்த தேசிய கொடி அவரது பேத்தி நிகாரிகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் முப்படையினர் வாஜ்பாய் உடலை சவப்பெட்டியில் இருந்து எடுத்து பாடையில் வைத்தனர். பின் அவரது உடல் தகன மேடையில் வைக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க வாஜ்பாயின் உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்குகளை செய்தனர்.

இறுதியில் ராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமிதா அவரது சிதைக்கு தீ மூட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

அனைத்துக் கட்சியினராலும் பெரிதும் விரும்பப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதராக வாழ்ந்தவர் வாஜ்பாய். உலக தலைவர்கள் மத்தியில் நல்ல மதிப்புமிக்க தலைவராகவும் வாஜ்பாய் அறியப்பட்டார். அதன் அடையாளமாக இன்று நடந்த அவரது இறுதி சடங்கில் எந்த பேதமின்றி அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டனர்.

வாஜ்பாயின் அஸ்தி கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை மற்றும் தபதி ஆகிய ஐந்து புண்ணிய நதிகளில் கரைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!