வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ; ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம் – AanthaiReporter.Com

வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ; ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்

கவிஞர் வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சடகோப ராமானுஜ ஜீயர் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆண்டாளை தவறாக சொல்லியிருப்பதாக ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பாஜகவும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. எச்.ராஜா, கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை வசைபாடியிருந்தார்.இந்த விவகாரம் பெரிதாக, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஹெச்.ராஜாவும் வைரமுத்துவை இழிவாகப் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், பிரச்னை ஓயாமல் இழுத்துக் கொண்டே போகிறது. அதேசமயம் வைகோ, ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, ‘ஆண்டாள் சன்னதியில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறி, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருந்தார். முக்கிய பிரமுகர்கள் ஜீயருடன் பேச்சு நடத்தியதையடுத்து ஜீயர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மேலும் வைரமுத்து வரும் பிப்.,3 ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க தவறினால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஜீயர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வைரமுத்து தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் தராத காரணத்தால், அதனை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சடகோப ராமானுஜர் மீண்டும் இன்று உண்ணாவிரதத்தை துவக்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ஜீயர், வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஆண்டாளின் குழந்தைகள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகியுள்ளனர். வைரமுத்து லோகமாதாவை இழிவு படுத்தி பேசியிருக்கிறார். அதற்காக, அவர் ஆண்டாளிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதனை வலியுறுத்தி இன்றிலிருந்து மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். ஆண்டாள் கூறும்வரை உண்ணாவிரதத்தை தொடர்வேன். இனிமேல் எந்த மதத்தையும் யாரும் இழிவாகப் பேசக் கூடாது என்பதற்காக இந்த உலகத்தில் உள்ள அனைத்து இந்து மக்கள் ஆன்மிக வழியில் போராட வேண்டும்” என்றார்.