தமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை! – AanthaiReporter.Com

தமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை!

தமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னைப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இந்நாள் அமெட் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான திருவாசகம்,  சுவிட்சர்லாந்துசுரேஷ், தொழிலதிபர் சிங்காரம், சிற்பி தட்சிணா மூர்த்தி, வெற்றித்தமிழர்பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட்ட வெற்றித் தமிழர் பேரவையினர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாகக் கர்நாடக இசைப் பாடகிகடலூர் ஜனனி திருக்குறளை இசைப்பாடல்களாகப் பாடினார் பிறகு கவிஞர் வைரமுத்து உரத்த குரலில் திருக்குறள்களைச் சொல்லச் சொல்ல, கூடியிருந்த குழந்தைகள் பின் மொழிந்தார்கள்,

விழாவில் திருவள்ளுவர் திருநாள் செய்தியாகக் கவிஞர் வைரமுத்து ஊடகங்களோடு பேசியது இது:

“உலகத் தமிழர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள். திருக்குறள் படைத்த புலவர் என்று மட்டும் திருவள்ளுவரைக் கருதிவிட முடியாது. அவர் ஒரு புரட்சியாளர். மதுப் பழக்கம் என்பது தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்து வந்தது, அதை யாரும் ஒரு பாவமாகக் கருதாத காலமது. ஆனால் “கள்ளுண்ணாமை” என்ற அதிகாரம் எழுதி மதுவுக்கு எதிராக முதல் கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர்.

“புலால்உண்ணாமை”என்றஅதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக இறைச்சிக்கடைகளை ஒரு நாள் மூடுகிற முடிவெடுக்கிறநாம், கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்?

2018-19ஆம் நிதியாண்டில் தமிழகஅரசுக்கு 1,76,251கோடி வருமானம் கிட்டும் என்று அறியப் படுகிறது. இதில் மதுக்கடைகளால் பெறப்படும் வருமானம் மட்டும் தோராயமாக 20,000 கோடி என்று குறிக்கப்படுகிறது. மதுவால் 20,000 கோடி ஈட்டுகிற அரசு 20 சதவிகித மக்களை அதனால் பாழ்படுத்துகிறது.

இந்தநாட்டின் பெரும்பாமையான விபத்துக்களுக்கு காரணம் மது. குடும்பங்களைக் குலைப்பது மது. அனாதைச் சிறுவர்களை உண்டாக்குவது மது.கொலைகளைஅதிகரிப்பது மது. தற்கொலைகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போவது மது.

நான் கிராமத்தான் இன்னும் கிராமத்தில் வாழுகிறவன், இன்றைய கிராமத்தில் சென்று பார்த்தால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிப் போனார்கள், நரைத்த தலைகளைப் பார்க்க முடியவில்லை ஊருக்கு வழிகாட்டும் கிழவர்கள் அதிகம் இல்லை. 15வயதில் குடிக்க தொடங்கியவர்கள் 50 வயதுக் குள் அடியாகிப் போகிறார்கள். தமிழர்களைக் கொன்று விட்டு எப்படித் தமிழ்நாட்டை வாழ வைக்கப் போகிறோம்?

தமிழகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுகிற இந்த மதுவை ஒரேநாளில் ஒழிக்க முடியாவிட்டாலும் படிப்படியாக ஒழிப்பதற்கு அடிப்படைத் திட்டங்களை உருவாக்க வேண்டும். மதுவை எந்த ஆட்சி ஒழிக்கிறது என்பது முக்கியமல்ல; எந்த ஆட்சி ஒழித்தாலும் அதுதான் மக்களாட்சி என்று கொண்டாடப்பெறும்.”இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்