சினிமா புரொடியூசர் ஆனார் – வைகோ!! – AanthaiReporter.Com

சினிமா புரொடியூசர் ஆனார் – வைகோ!!

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து, சென்னையில் உள்ள நாரத நாடக சபாவில் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ம.தி மு.க பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், நடிகர்கள் விஷால், நாசர், விவேக், பார்த்திபன், விஜயகுமார் மற்றும் இயக்குனர் முத்துராமன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நாடகம் முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் திரைப்படங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு பற்றி சுட்டிக்காட்டி, தமிழ் திரைத்துறைக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரிவித்திப்பை அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகப் பிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்க  உள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ.

இதையொட்டி நடந்த நேற்றைய நிகழ்சியில் கலந்து கொண்டு விஷால் பேசும்போது, “வைகோ அவர்கள் வேலு நாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். எனக்கு தமிழக அரசோடு முக்கியமான சந்திப்பு இருந்தது. சில விஷயத்தை சில நேரத்தில் தவிர்க்க வேண்டியிருக்கும். முதலில் இந்த நாடகத்தை இயக்கிய இயக்குனருக்கும் , இந்த நாடகத்தில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் , பெரிய மருது , சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நீங்கள் நடித்த நடிப்பு , தங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் பாராட்டுக்கள். இங்கே நமது திரைத்துறையை சேர்ந்த பலரும் இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசருக்கு வரிகட்டுவதை எதிர்த்து வேலுநாச்சியார் போராடினார். தமிழக அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம்.

 

நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும். ஒரு பாதுகாப்பான பாதை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்த வேலுநாச்சியார் என்ற கதாபாத்திரத்துக்கும் , என்னை ஊக்குவித்த வேலுநாச்சியார் கதாபாத்திரத்துக்கும் நன்றி. அதே போல் நான் கத்தியால் சண்டை போட போவதில்லை , புத்தியால் தான் சண்டை போட போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எனக்கு வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது. இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க போகிற வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு வாய்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்