யு டர்ன் – திரை விமர்சனம்! – AanthaiReporter.Com

யு டர்ன் – திரை விமர்சனம்!

யு டர்ன் ரிவியூக்குள் போகும் முன் கொஞ்சம் சொந்த பிளாஷ் பேக்.. ஜூ.வி.யில் கிரைம் ரிப்போர்ட் டராக இருந்த எனக்கு மாதம் இரண்டு ஸ்பெஷல் எக்ஸ்குளூசிவ் ஸ்டோரியாவது கொடுக்க வேண்டுமென ஆவல்.. அதையொட்டி யோசித்தபடி வீட்டில் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வாயில் கல் தட்டுப்பட எடுத்து கீழே போட்டு விட்டு சாதத்தை நன்றாக பிசையும் போது மேலும் ஓரிரு கல்..கள்! அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தால் அது அரிசி வடி விலேயே இருந்தது. ஆம் சாதத்திலிருந்து கிடைத்த நான்கைந்து கற்களுமே அரிசி வடிவில் இருந்ததைக் கண்ட இந்த அரிசி எங்கே வாங்கினோம் என்று கேட்டு தெரிந்து கொண்டு சாப்பிடாமல் அக்கடை போய் விசாரித்தேன். கடைக்காரர் ஒரு தெலுங்கு சப்ளையரின் போன் நம்பர் கொடுத்தார். அவருக்கு போன் செய்து அவரின் அரிசி குடோன் இருக்கும் சிந்தாதிரி பேட்டை போய் விசாரித்த போது அவருக்கான அரிசி மூட்டைகள் பேக் செய்யும் பெரியமேடு அட்ரஸ் சொன்னார். அங்கு போய் விசாரிக்கும் போதே ஏகப்பட்ட தடைகள்.. இதையடுத்து லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் துணையோடு நோண்டினால் அரிசி சைசில் கல் தயாரிக்கும் மிஷின்கள் நாலைந்தை கைப் பற்றினோம்.. இப்படி அரிசி சைஸ் கல்லை தமிழ்நாடெங்கும் அனுப்பி மூட்டைதோறும் 50 முதல் 100 கிராம் வரை கலக்க ஏஜெண்டுகள்.. அதன் மூலம் சில பல லட்சம் ரொட்டேஷன் செய்யும் கும்பலை வளைத்து பிடிக்க வைத்து என ஒரு வார மேட்டர் தேற்றினேன்.. அது போல்தான் எங்க வீட்டுகாரரைக் காணோம் என்று வந்த ஒரு புகாரை விசாரிக்கையில்தான் ஆட்டோசங்கர் என்ற கிரிமினல் எக்ஸ்போஸ் ஆனான்.. அது மாதிரியான சூப்பர் த்ரில்லர், இன்வெஸ்டிகேசன் கதைதான் யு டர்ன்.

ஒரு ஆங்கில இதழின் நிருபர் சமந்தா மேம்பாலம் ஒன்றில் நடக்கும் தொடர் மரணங்களை குறித்து செய்தி சேகரிக்கிறார். அதில் பல்வேறு திடுக்கிடும் ஆதாரங்கள் கிடைத்து வரும் சூழலில் அவரே யு டர்ன் பாணியில் அடுத்த இலக்காக மாறி விட அதிலிருந்து எங்ஙனம் மீண்டு வருகிறார் என்பது தான் படத்தின் கதை. 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ’யு டர்ன்’ படம்தான் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கன்னடத்தில் இயக்கியே அதே பவன் குமார் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஒரு த்ரில்லர் படத்தின் ஃபார்முலாவான அடுத்தது என்ன என்று யூகிக்க முடியாத சீன்கள் பலவற்றை இலாகவமாக கோர்த்து மிரட்டி இருக்கிறார்

கீர்த்தி சுரேஷ், நயந்தாரா போன்றோர் கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பது அதிகரித்து வரும் சூழலில் இந்த யு டர்ன் மூலம் சமந்தாவும் தனக்கான நடிப்பு + மார்க்கெட் பலத்தை காட்ட முயற்சித்துள்ளார். சிம்பிளாக, முகத்தில் அப்பாவித்தனத்துடன் கூடிய ஆர்வம், வியப்பு, பதட்டம், பயம், அசட்டுத் துணிச்சல் என ஜர்னலிஸ்டுக்கான அத்தனை சாமுத்திரிகா லட்சணத்தோடு தோன்றி அப்ளாஸ் வாங்குகிறார் .

சமந்தா. அப்புறம் இந்த ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா, நரேன் போன்ற பலர் முக்கியமான கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இரண்டே மணி நேர யு டர்னில் ப்ரோமோ பாடலை தவிர வேறு பாடல்கள் இல்லை.

குறிப்பா கவின் பாலாவின் வசனம் கச்சிதம் , சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு ரொம்ப ஷார்ப். நிக்கேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு கொஞ்சம் ரெட் லைட் அதிகம் என்றாலும் கச்சிதம், பூர்ண சந்திர தேஜஸ்வி இசை பக்கா என பல ப்ளஸ் பாயிண்டுகள் உள்ள இந்த யு டர்னில் சில குறை பாடுகள் இருக்கதான் செய்கிறது. ஆனாலும் அதை உடனே மறக்கடிக்க செய்யும் சமந்தா + டைரக்டர் பவன் குமார் கூட்டணியின் உழைப்பை கண்டால் கரகோஷம் எழுப்புவது நிச்சயம்.

மார்க் 5 / 3.5