விரைவில் பணம் & ஏ டி எம் கார்டுகள் ஒட்டுமொத்தமாக ஒழிந்துவிடும்? – AanthaiReporter.Com

விரைவில் பணம் & ஏ டி எம் கார்டுகள் ஒட்டுமொத்தமாக ஒழிந்துவிடும்?

மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான். இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.

vanikam nov 11

ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம். அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது. மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் – சோழிகளை – மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர்.

சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது. இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும. அது மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டுமே கடினமான பொருள்கள். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன.

செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அறிய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர். தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.

பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள்உண்மையே நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர். அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன. அந்த காசுதான் எப்படியெப்படியோ உருமாறி இப்போது நாம் பயன் படுத்தும் காசுகளாகவும் ,பணம் என்னும் கரன்சி நோட்டுளாகவும் பல காலங்களையும் பல நாகரிகங்களை தாண்டி வந்து உள்ளது என்று நினைக்கும் போது சற்று வியப்பாகவே உள்ளது.

தற்போதைய நிலையில் பணத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோகும் வழிகள் இன்று கடவுளின் பத்து அவதாரங்கள்போலப் பலவகையாக இருக்கின்றன. அதில் ஒன்று பண அட்டை(டெபிட் கார்ட்). மற்றொன்று கடன் அட்டை(கிரெடிட் கார்ட்). இணைய வழி பணப் பரிமாற்றம்(நெட் பேங்கிங்) உள்ளிட்ட வழிகளும் உள்ளன.

இந்த அட்டைகள் வந்தாலும் பணப் பரிமாற்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பேடிஎம்’(Paytm) போன்ற மொபைல் வாலெட் நிறுவனங்கள் தங்களின் போட்டி நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்களில் சிக்கல்களை உருவாக்குவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. பண அட்டைகள் நகலாக்கம் செய்து மோசடி செய்கிறார்கள் என்ற புகார்களும் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில்தான் யுனைடெட் பேமண்ட்ஸ் இண்டர்பேஸ் எனப்படும் யுபிஐ (UPI) புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் நுழைந்துவிட்டது. இது உங்களின் செல்போனையே ஒரு பண அட்டையாக மாற்றுகிறது. இதன் செயலியை எல்லோரும் தங்களின் செல்பேசியில் நிறுவிக்கொண்டால், ஏடிஎம் பக்கம் போகத் தேவையில்லை. ஏற்கெனவே பலர் தற்போது தாங்கள் பணம் போட்டு வைத்துள்ள வங்கிக்கே போவதில்லை. வங்கியைப் பண அட்டை (ஏடிஎம் கார்டு) விழுங்கி வருகிறது. அதைப் போல நாளை பண அட்டையை நமது கையில் உள்ள செல்பேசி விழுங்க ஆரம்பிக்கிற ஒரு புதிய சூழலில் நாம் நுழைந்துள்ளோம்.

அப்படி என்ன இருக்கிறது இந்தப் புதிய தொழில்நுட்பத்தில்? இணைய வழியாகப் பணத்தை வேறு ஒருவருக்கு மாற்றுபவர்கள் ஐ.எம்.பி.எஸ். எனும் (உடனடி பணப் பரிமாற்றச் சேவை) முறையில் அனுப்புவார்கள். பணத்தை யாருக்கு அனுப்புகிறோமா அவரது வங்கிக் கணக்கு எண்ணும் அந்த வங்கியின் ஐ.எஃப்.எஸ்.சி. கோட் எனும் அடையாள எண்ணும் அதற்கு வேண்டும்.

ஆனால், தற்போது புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள முறையில் அது எதுவும் உங்களுக்குத் தெரிய வேண்டாம். [email protected] அல்லது [email protected] என்று உங்களின் செல்பேசி எண்ணை வைத்தோ உங்களுக்கு ஒதுக்கப்படுகிற ஒரு அடையாள எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு உங்களால் உடனடியாகப் பணத்தை இன்னொருவருக்கு அனுப்ப முடியும்.

கடைக்காரர் தனது செல்பேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்புவார். அதில் உள்ள சுட்டியைச் சொடுக்கி, நீங்கள் அவருக்குத் தர வேண்டிய பணத்தைக் குறிப்பிட்டு அனுப்பினால், அவரது வங்கிக் கணக்குக்குப் பணம் போய்விடும். அவரும் ‘கிடைத்துவிட்டது நன்றி’ என்பார். நீங்கள் போய்க்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.இணைய வழி பணப் பரிமாற்றங்கள், பண அட்டை மற்றும் கடன் அட்டை பயன்படுத்திச் செய்யப்படும் பரிமாற்றங்கள், மொபைல் வாலெட்கள் மூலமாக நடைபெறும் பரிமாற்றங்கள் எல்லாவற்றையும்விட மிக எளிதானது இந்த முறை.

இந்தப் பணப் பரிமாற்ற முறையில் ஆதார் அட்டையும் இணைக்கப்பட உள்ளது. தற்போது இந்தப் புதிய முறைக்கு ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட 19 வங்கிகள் சம்மதித்துள்ளன. இந்த வருட முடிவுக்குள் மேலும் பல வங்கிகள் இதில் இணையும். மத்திய அரசின் தேசியப் பணப் பரிமாற்றக் கழகம் எனும் அமைப்பின் முன்முயற்சியில் ட்ருபே (Trupay) எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் ஆதார் அட்டைகளை வாங்கியிருப்பவர்களும் சாதாரண செல்பேசிகளை வைத்திருப்போரும் 100 கோடியைச் சமீபத்தில் தாண்டியுள்ளனர். ஸ்மார்ட் போன்கள் எனப்படும் திறன்பேசிகள் 20 கோடிப் பேரிடம் இருக்கின்றன.இந்தியா மட்டுமே இந்தப் புதிய வழிமுறைக்கு மாறவில்லை. ஆப்பிரிக்க நாடுகளான கானா, கென்யா, தான்சானியா நாடுகளும் இதை அமல்படுத்திவிட்டன. சுமார் 3 கோடிப் பேர் வசிக்கும் கானாவில் 17% பேர் செல்பேசி வழியாகப் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். 91% பேர் அங்கே செல்பேசி வைத்துள்ளனர்.

இந்தியாவில் 2.5 கோடி வியாபாரிகள் உள்ளனர். ஆனால், பண அட்டை தேய்க்கும் இயந்திரங்களை 12 லட்சம் பேர்தான் பயன்படுத்துகின்றனர். அரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காக வெளிப்படையான பணப் பரிமாற்றங்கள் நடப்பதை வியாபாரிகளில் ஒரு தரப்பினர் விரும்புவதில்லை. இனி மேலும் அத்தகைய மனப்போக்கில் வியாபாரிகளை இருக்க விடாமல் இந்தப் புதிய தொழில்நுட்பம் நெருக்கடி கொடுக்கும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அது நல்லது. ஆனாலும் ‘இன்று நகரில் 50 செல்பேசிகளைப் பறித்துப் பல்லாயிரம் ரூபாய் திருட்டு’ என்பது போன்ற செய்திகளை நாளிதழ்களில் வாசிப்பதற்கும்தான் நீங்கள் தயாராக வேண்டும்!

– த.நீதிராஜன்