குழந்தைகள் நலன் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியா முன்னோடி! – AanthaiReporter.Com

குழந்தைகள் நலன் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியா முன்னோடி!

இந்தியாவில் குழந்தைகள் கல்வி கற்பதில் மிகவும் பின் தங்கியுள்ளதாகவும் இதனால் அக்குழந்தைகளின் எதிர்காலத்தோடு இந்தியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் உலக வங்கி அண்மையில் எச்சரித்து இருந்தது.வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்து  இருந்தது. அதாவது ஒரு வார்த்தை கூட வாசிக்க முடியாத இரண்டாம் வகுப்பு குழந்தைகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள உலகவங்கி இந்தியா உடனடியாக கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து இருந்த நிலையில் குழந்தைகள் மேம்பாட்டில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. குழந்தைகள் நலன் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ வாய்ப்புள்ளது என யூனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனர் ஜஸ்டின் ஃபோர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பான யூனிசெஃப்பின் துணை நிர்வாக இயக்குனர் ஜஸ்டின் ஃபோர்சித் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இங்கு அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபார் தாஸ் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பேசினார். பின் வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கத்தில் உரையாற்றிய ஜஸ்டின், இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தைகள் மேம்பாட்டில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்றார்.

அவர் உரையின் சாராம்சம்

குழந்தைகளின் வளர்ச்சிப் பணிகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது காட்டுகிறது. ஆனால் அதேசமயம் ஜார்கண்ட் போல் இந்தியாவின் சில பகுதிகளில் பல குழந்தைகள் கவனிப்பாரின்றி விடப்படுகிறார்கள்.அவர்களுக்கு அரசாங்கத்தின் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாதி வேறுபாடு மற்றும் எந்த வசதியும் இல்லாத மிகவும் பின் தங்கிய இடங்களில் அவர்கள் வசிப்பது தான்.குழந்தைகள் மேம்பாட்டில் இந்தியாவின் மத்திய மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், சிவில் சமூகம் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அதன்மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு உதாரணமாக திகழ வேண்டும்

அதே சமயம்இந்தியாவில் தீவிரமாக உள்ள குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, குழந்தை கடத்தல் போன்ற பிரச்சனைகள் குறித்து ஜஸ்டின் கவலை தெரிவித்தார். ஆனாலும் தூய்மை இந்தியா திட்டத்தில் நாட்டின் பல இடங்களில் பல குழந்தைகள் முக்கிய பங்காற்றி வருவது குறித்து ஜஸ்டின் ஃபோர்சித் பாராட்டினார்..