ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்! – மன்சூரலிகான் ஆவேசம்!

ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்! – மன்சூரலிகான் ஆவேசம்!

மரிக்கார் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஸிம் மரைக்கார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘உன் காதல் இருந்தால்’. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, லேனா, மெக்பூல் சல்மான், ரியாஸ்கான், வையாபுரி, கஸ்தூரி, சிராங் ஜெனி, ஜென்சன், கிரேன் மனோகர், ஹர்ஸிகா பூன்ச்சா, சோனா, ஸ்ரேயா ரமேஷ், சக்தி திவேதி, காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  நிகழ்ச்சி நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிக்க நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகை லேனா பேசும்போது, “இயக்குநர் ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாகவும், வித்தியாசமான பாத்திரமாகவும் இருந்தது. அதிலும் புகை பிடிக்கும் காட்சி கள்தான் சற்று கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனை வருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் தற்போது விக்ரமுடன் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்..” என்றார்.

நாயகர்களில் ஒருவரான மபுள் சல்மான் பேசும்போது, “எனக்குத் தமிழ் கொஞ்சம்தான் தெரியும். மலையாளத்தில் 15 படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு தமிழில் இதுதான் முதல் படம். தமிழ்ப் படங்கள் நிறைய பார்ப்பேன். எனக்கும் என் பெரியப்பா மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் மாதிரி தமிழ் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தேன். அப்போதுதான் ஆசிப் இந்த வாய்ப்பை கொடுத்தார். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்…” என்றார்.

நாயகி சந்திரிகா ரவி பேசும்போது, “இது எனக்கு மூன்றாவது படம். ஆனால் கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மாதிரியான கதாபாத்திரம் அல்ல…” என்றார்.

நடிகை காயத்ரி பேசும்போது, “நல்ல கதாபாத்திரத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சி. ரியாஸ்கானும், மபுலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஸ்ரீகாந்துடன் நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்பதில் எனக்கு மிகப் பெரிய வருத்தம்..” என்றார்.

இயக்குநர் ஹாசிம் மரிக்கர் பேசும்போது, “ஒரு முறை தொலைக்காட்சியில் அபிராமி ராமநாதன் பேட்டியை பார்த்தேன். ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு கதைதான் தேவை என்று சொன்னார். இப்படத்தில் அது இருக்கும். இப்படத்தின் பெயர்தான் காதல் சம்பந்தப்படுத்தி இருக்கும். ஆனால் படத்தில் காதல் பற்றி ஒன்றும் இருக்காது. உச்சபட்ச த்ரில்லர் படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகன்தான். அது ரியாஸ்கான் மட்டும்தான். அவரை தவிர மற்ற அனைவரும் வில்லன்கள்தான்.இப்படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது. படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். புதுமையான முயற்சிகளை கையாண்டிருக்கிறோம். எல்லோரும் கேட்கலாம், ‘ஏன் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தீர்கள்?’ என்று. ஏனென்றால், தமிழ் படங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த மேடையிலேயே எனது அடுத்த படத்தின் பெயரையும் அறிவிக்க இருக்கிறேன்…” என்றார்.

நடிகர் ரியாஸ்கான் பேசும்போது, “நாம் எல்லோரும் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்று சொல்வது இயற்கைதான். அதேபோல் தான் நானும் இதுவரை 300 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் 150 படங்கள் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த படத்தில் உண்மையாகவே வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். என் மேல் நம்பிக்கை வைத்து இக்கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. சினிமாவிற்கென்று ஒரு விதிமுறை எப்போதும் உண்டு. ஒருவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால், அடுத்த படத்திலும் அதே கதாபாத்திரம்தான் கொடுப்பார்கள். ஆனால், நாம்தான் விடாமுயற்சியால் மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய முழு திறமையும் வெளிவரும். ஆகையால், இப்படமும் சரி, என்னுடைய கதாபாத்திரமும் சரி நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னைப் போலவே இப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கதாபாத்திரமும், வித்தியாசமான அனுபவமும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். லேனாவிற்கு வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “இந்தப் படத்தில் கடைசியாகத்தான் வந்து சேர்ந்தேன். ஹாசிம் எனக்கு நல்ல நண்பர். என்னிடம் கதை கூறியதுமே நீங்கள் என்ன கூறினீர்களோ படத்திலும் அப்படியே வந்தால் நன்றாக இருக்கும் என்றேன். மிகப் பெரிய தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து வந்தவர். பெரிய படங்களை கொடுத்த நிறுவனம். இவரும் தயாரிப்பில்தான் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இயக்குநராக வந்துவிட்டார். மலையாளத்தில்தான் இப்படத்தை எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் இயக்கியிருக்கிறார். நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம் சைகாலாஜிக்கல் திரில்லர் படம். திரைக்கதை யில் நிறைய சவால்கள் இருக்கிறது. அதை திறமையாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்.ஆனால் நான் நடித்த பாடல் இப்படத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். லேனா மிகச் சிறந்த நடிகை. பிற மொழிகளில் அவர் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். தமிழில் ‘அனேகனு’க்கு பிறகு அவர் ஏன் நிறைய படங்கள் நடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. சிறந்த நடிகரான விக்ரமுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்பதை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். தமிழில் இன்னும் நிறைய படங்களில்அவர் நடிக்க வேண்டும். எல்லோரிடமும் கற்றுக் கொள்ள ஏதோ வொன்று இருக்கும். அதுபோல் லேனாவிடமும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படத்தில் எல்லோரிடமும் பணியாற்றியது மகிழ்ச்சி. மன்சூர் நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவருடைய முதல் ஆல்பம் ஆன்லைனில் பிரபலமானது. அவர் நல்ல பாடகரும்கூட. ரியாஸ் இன்னும் உடலை நன்றாக வைத்திருக்கிறார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

இசையமைப்பாளர் மன்சூர் அஹமது பேசும்போது, “சினிமாவிற்கு மலையாளம், தமிழ், ஹிந்தியென்றோ மொழி ஒன்றும் பேதமில்லை. இப்படத்தின் கதையை புரிந்து கொண்டு அதற்கேற்ப இசை அமைத்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்து ஹாசிம் மரைக்கருக்கு நன்றி…” என்றார்.

மன்சூர் அஹமது (இசையமைப்பாளர்) சினிமாவிற்கு மலையாளம், தமிழ், ஹிந்தியென்றோ மொழி ஒன்றும் பேதமில்லை. இப்படத்தின் கதையை புரிந்து கொண்டு அதற்கேற்ப இசை அமைத்து இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்து ஹாசிம் மரிகருக்கு நன்றி” என்றார்.

சிறப்பு விருந்தினரான் மன்சூர் அலிகான், “மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகத்திற்கு வந்து இரு மொழிகளிலும் தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாசிம் மரிகர். மம்முட்டி குடும்பத்திலிருந்து அவரது மகனும் மற்றும் தம்பி மகனும் சினிமாவிற்கு வந்துவிட்டார்கள். அதுபோல் அனைத்துத் துறைகளில் இருப்பவர்களும் சினிமாவிற்கு வரவேண்டும். விவசாயம் செய்பவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மம்முட்டியுடன் நடிப்பது என் லட்சியம். தமிழில் அவருடன் மூன்று படங்கள் நடித்துவிட்டேன். அனைத்தும் நூறு நாட்கள் படம். மலையாளத்தில் அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது மிகப் பெரிய ஏக்கமாக உள்ளது.

சினிமா என்பது மொழி, இலக்கியம், நாடு ஆகியவற்றைக் கடந்த ஒன்று. அந்த வகையில் கோடி கணக்கில் பணம் செலவழித்து ஒரு படம் எடுக்கிறார்கள். அதற்கு ‘கில்ட்’ல் இருப்பவர்கள் வர வேண்டும். ஒருவரும் வராமல் இருப்பது மனக் குறைவாக இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான பெரிய படம் சரியான வசூலில்லை. ஏனென்றால் மக்களின் பணம் சூறையாடப் படுகிறது. இருந்தும் மக்களுக்கு சினிமா மீது இருக்கும் மோகத்தால் படங்களை பார்க்கத் தொடர்ந்து வருகிறார்கள். இரண்டு வருடங்களாக தங்களிடம் இருக்கும் பணத்தைப் போட்டு படம் எடுக்கிறார் கள் என்றால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் வருமானம் வரவேண்டும். ஆனால் பெரிய படங் களுக்கு விடியற்காலை 4 மணி காட்சி, 5 மணி காட்சி என்று எதற்கு போடுகிறார்கள். அதிலும் ரூ.1000 முதல் ரூ.5000 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்த விலை என்ன?

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி, எத்தனை கோடி செலவழித்து எடுத்த படமாக இருந்தாலும் சரி ஒரு டிக்கெட்டின் விலை ரூ.60 முதல் ரூ.160 க்கும் மேல் யார் விற்கிறார்களோ, அவர்களை நேராக சென்று அடிப்பேன். என் ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து டிக்கெட்டிற்கு பணம் வசூலிப்பவரை சும்மாவிட மாட்டேன்.

அதேபோல், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதற்காக வசூலித்துக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தையும் எதிர்க்கிறேன். ரூ.10க்கு மேல் வசூலிக்கக்கூடாது. அரசியல் அரியாசனத்தில் அமர்ந்திருப்பவர்களின் தேவையைத் தீர்ப்பதல்ல சினிமா. சாமான்ய மக்களின் சட்டை பையில் இருக்கும் சிறிய தொகையில் சந்தோஷத்தைக் கொடுப்பதுதான் சினிமா.

இன்று டாஸ்மாக் இல்லாமல் அரசாங்கம் இல்லை. அந்த டாஸ்மாக்கில் ரூ.115க்கு விற்கப்படும் சரக்கை ரூ.200க்கு விற்றால் சும்மா விடுவார்களா? அதேபோல் டிக்கெட் விலையும் ரூ.160க்கு மேல் விற்கக்கூடாது. எந்தத் திரையரங்கமாக இருந்தாலும் சரி இதை மீறி வசூலித்தால் என்னிடம் கூறுங்கள், நான் அவர்களை தண்டிக்கிறேன்.

உச்சத்தில் இருக்கும் ரஜினி, கமல், விஜய், விஷால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் இதற்கு கோரிக்கைவிடுக்க வேண்டும்.

ஏனென்றால், ஈழத்தமிழர்கள் 40 நாடுகளில் 20 லட்சம் பேர் வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வளவோக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் படங்களைப் பார்ப்பதால் தான் இன்று பத்து கோடிக்கு மேல் வசூல் வருகிறது. ஆகையால், யாரெல்லாம் அதிக விலைக்கு விற்கிறார்களோ அவர்கள் என் மீது FIR போட்டாலும் பரவாயில்லை. அவர்களை அடிப்பேன் என்று சவால் விடுகிறேன், அடி உதவுவது போல் யாரும் உதவமாட்டார்கள்.

தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தி மக்களுக்கு சினிமா மீது போதையை உண்டாக்குகிறார்கள். மக்களும் எப்போது படம் வெளியாகும் என்று பணம் கையில் இல்லாமல் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு இந்த நாடு முதல்வரை கொலை செய்துள்ளது. பிரதமரால் மார்வாடிக்கும் குஜராத்திக்கும் நாட்டை விற்று விட்டார். 2000 தென்னம்பிள்ளைகள் இழந்து நிற்கிறோம். என் மக்களுக்காக நான் எதையும் செய்வேன்”என்று ஆவேசமாக பேசினார்

இறுதியாக, ‘உன் காதல் இருந்தால்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹாசிம் மரைக்கார் தயாரிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘4-K’ என்னும் ‘கனவில் கண்ட காதல் கவிதை’ வெளியிடப்பட்டது.

இப்படத்தின் ஒளிப்பதிவு – சஜித் மேனன், படத் தொகுப்பு – சாய் சுரேஷ், இசை – மன்சூர் அஹ்மத், பின்னணி இசை – காந்த் தேவா, வசனம் – தாவூத், பாடல்கள் – அந்தோணி தாசன், கார்த்திக், மானஸி, பாடல்கள் – பிரபாகரன், அமுதன், கண்மணி, கலை இயக்கம் – அர்கான் எஸ்.கர்மா, சண்டை இயக்கம் – ரன் ரவி, நடன இயக்கம் – ரமேஷ், கிராபிக்ஸ் – பினாய், உடைகள் – அரவிந்த், உடை வடிவமைப்பு – சாந்தி கிருஷ்ணா, ஒப்பனை – பிரதீப் ரங்கன், ஸ்டில்ஸ் – வித்யாசாகர், தயாரிப்பு நிர்வாகம் – சுனில் பேட்ட, மக்கள் தொடர்பு – ஜான்சன்.

error: Content is protected !!