இந்தியாவெங்கும் 24 போலி பல்கலைகழகங்கள்!

இந்தியாவெங்கும் 24 போலி பல்கலைகழகங்கள்!

ஆண்டுதோறும் வெளியிட்டப்படும் விஷயம்தான். இந்தாண்டு நம் நாட்டில் செயல்பட்டு வரும் 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் இதன் எண்ணிக்கை 24 என்பதுதான் சோகம்!

நாட்டின் தலைநகரமான டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.), என்ற பெயரிலும், மேற்கு வங்காள மாநிலம் நாதியாவில் உயிரி ரசாயன கல்வி மானிய கமிஷன் என்ற பெயரிலும் 2 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மீது பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி. கடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. போலீசில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதே நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியலை பல்கலைக் கழக மானியக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அவற்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8, டெல்லியில் 7, மேற்கு வங்காள மாநிலம், ஒடிசா மாநிலங்களில் தலா 2, பீகார், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

இதுபற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர் சத்யபால்சிங் எழுத்து மூலம் அளித்த ஒரு பதிலில், “பட்டப்படிப்புகள், பட்ட மேற் படிப்புகள் நடத்திக்கொண்டு, மக்களை முட்டாள் ஆக்கும் விதத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருகிற போலி பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. அவை உரிய அனுமதியின்றி நடத்தப்படுபவை ஆகும்.

மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளர்கள், கல்வித்துறை செயலாளர்களுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் தங்கள் பகுதியில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இத்தனிக்கும் ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் நம் நாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு இது போன்ற போலி பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு அவற்றில் சேர வேண்டாம் என மாணவ, மாணவிகளைக் கேட்டு வந்தும் அவற்றில் மாணவர்கள் சேருவதால்தான் அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!