திமுக இளைஞரணிச் செயலாளரானார்- உதயநிதி ஸ்டாலின்!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு! – AanthaiReporter.Com

திமுக இளைஞரணிச் செயலாளரானார்- உதயநிதி ஸ்டாலின்!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகரும், முரசொலியின் நிர்வாக இயக்குநரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகனு மான உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலர் பதவி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆளுகைக்குள்பட்ட திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பப்பட்டது. இதனைப் பின்பற்றி பல மாவட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்!

திமுக மீது தொடர்ந்து வாரிசு அரசியல் கட்சி என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது., “திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக சட்டவிதி 18, 19 பிரிவுகளின்படி இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் உதயநிதியுடன் இணைந்து பணியாற்றுவார்கள்” என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

திமுக-வின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுவது இளைஞர் அணிச் செயலாளர் பதவி, திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவருடைய மகன் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியின் செயலாளர் பொறுப்பிலிருந்த ஸ்டாலின், திமுக-வின் பொருளாளர் பதவிக்கு வந்தபோதே தான் உருவாக்கிய இளைஞரணி பதவியை விட்டுக் கொடுத்தார். அதற்கு பின்னர் அந்தப் பதவியில் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் இருந்தார். இந்நிலையில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய வாரிசான உதயநிதி திமுக கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார்.

திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்க வாய்மொழியாக வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவருடை பிரசாரத்துக்கு நல்ல வரவேற்ப்பு இருந்ததாக கட்சிக்குள் கூறப்படுகிறது.

இதன் பின்னர் உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு கட்சிக்குள் ஒலிக்க ஆரம்பித்தது. எனினும் கட்சியில் பதவியை நாடி நான் உழைக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தெரிவித்து வந்தார். எனினும் தற்போது உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.