அமெரிக்கா ; சனிக்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் ‘ஷட் டவுன்’! – AanthaiReporter.Com

அமெரிக்கா ; சனிக்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் ‘ஷட் டவுன்’!

சர்வாதிகார போக்குக் கொண்ட அதிபர் ட்ரம்பின் அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப டிரம்ப் முன் வைத்துள்ள கோரிக்கைக்கும் ஒப்புதல் தராமல் செனட் அவை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ‘பல அரசு அலுவலகங்கள் இயங்குவது நிறுத்தப்படும்.

அமெரிக்க அரசின் நிர்வாக மொழியில் “ஷட்டவுன்” என்பது, அமெரிக்காவில் மத்திய அரசின் சேவைகள் அனைத்துக்கும் ஊதியம் அளிக்க பணம் இல்லாத காரணத்தால் நிறுத்திவைக்கப் படுவதாகும். அத்தியாவசிய பணிகளான காவல்துறை, ராணுவம் தவிர அனைத்தும் முடங்கும். கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் ஷட்டவுன் 4ஆவது முறையாக ஏற்படவுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று 2ஆவது முறையாக ஷட்டவுன் நடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

முன்னதாக மெக்ஸிக்கோ-அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்ப 500 கோடி டாலர் நிதி கேட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், நிதி செலவினத்துக்கான மசோதாவை நிறைவேற்றாமல் செனட் அவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், குடியரசுக் கட்சிகள் அதிகம் கொண்ட பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இதற்கிடையே வெள்ளை மாளிகையில் ஜனநாயாகக் கட்சியின் எம்பிக்களும், குடியரசு கட்சியின் எம்பிக்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து சனிக்கிழமை இரவு 12.01 மணியில் இருந்து ‘ஷட் டவுன்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.

ஒரு வேளை இந்த ‘ஷட் டவுன்’ தொடங்கினால் எத்தனை நாட்கள் அமெரிக்காவில் நீடிக்கும் என்று தெளிவாகத் தெரியாது. ஆனால், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேறு வழியின்றி ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் கிறிஸ்துமஸ் நேரத்தில் ஏற்படும். கடந்த 3 காலாண்டுகளாக ராணுவம், சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் வரை முழுமையாக நிதி ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், 25 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்காமல் இருக்கிறது.

இந்த ‘ஷட்டவுன்’ நடவடிக்கையால், நாசா ஊழியர்கள், வர்த்தக துறை அதிகாரிகள், உள்துறை, நீதித்துறை, வேளாண்மைத் துறை ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அதே சமயம், நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் அனைத்தும் திறந்திருக்கும். ஆனால், ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரமாட்டார்கள்.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில்,”அமெரிக்காவில் இன்று இரவு ‘ஷட் டவுன்’ வருவது என்பது ஜனநாயகக் கட்சி எம்பி.க்களைப் பொருத்தது. இந்த பிரச்சனைக்கு குடியரசுக் கட்சியினர் ஒருவரும் காரணமல்ல. நாங்கள் எந்த காரணம் கொண்டும் ஷட்டவுனுக்கு ஆதரவில்லை. அதேசமயம், நீண்டகால ‘ஷட்டவுன்’ நடந்தால், அதற்கும் தயாராக இருக்கிறோம். இந்த ‘ஷட்டவுனை’ நாட்டின் எல்லைக்காக நடத்துவதில் பெருமை கொள்கிறேன். இந்த நாட்டு மக்கள் கிரிமினல்கள் நாட்டுக்குள் வருவதை விரும்பவில்லை. மெக்ஸிக்கோவில் இருந்து வரும் அகதிகள் ஏராளமான பிரச்சனையை உருவாக்குகிறார்கள், போதை மருந்தை கொண்டுவந்து சப்ளை செய்கிறார்கள்” என்றார்.