உ .பி. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அலை என்று தப்பாக செய்தி பரவுது! – காங். கவலை! – AanthaiReporter.Com

உ .பி. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அலை என்று தப்பாக செய்தி பரவுது! – காங். கவலை!

உ.பி.யில் முடிந்த 16 நகர மேயர் போட்டியில் பாஜக 14-ல் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2012 தேர்தலில் 12 என இருந்தது. இதைபோல் மற்ற பதவிகளுக்கான தேர்தல்களிலும் தமக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக பாஜக அறிவித்துள்ளது. இது உ.பி.யின் மாநகராட்சி, நகரசபை, நகர பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் என அனைத்து பதவிகளுக்கான தேர்தல் கணக்கில் எடுக்கப்படவில்லை எனவும், ஒரு குறிப்பிட்ட பதவிகளுக்கானதை வைத்து பாஜக தன்னைத்தானே தட்டிக் கொள்வதாகவும் உ.பி. காங்கிரஸார் நேற்று புகார் கூறியுள்ளனர்.

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath along with BJP state President Mahenra Narth Pandey and other party leaders celebrating victory in Urban,Local body elections at state party head office in Lucknow on friday.Express photo by Vishal Srivastav 01.12.2017

இது குறித்து உ.பி. மாநில மேல்சபையின் மூத்த உறுப்பினரான தீபக்சிங் கூறும்போது, ”உள்ளாட்சி அமைப்பின் அனைத்து பதவிகளுக்கான தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இதை மறைத்து தாம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக தன் தோளை தட்டிக் கொள்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு 90 சதவிகித வாக்குகள் கிடைத்தன. இது அடுத்து வந்த சட்டப்பேரவையில் 70 சதவிகிதமாகக் குறைந்தன. ஆனால், தற்போதைய உள்ளாட்சிக்கு அந்த சதவிகிதம் வெறும் 27 என மிகவும் குறைந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தீபக்சிங் உள்ளாட்சி தேர்தலின் சில புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளார். இதன்படி, 5217 நகரசபை தலைவருக்கான முடிவுகளில் பாஜக போட்டியிட்ட 125-ல் தோல்வி பெற்று 68-ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரசபைகளின் உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் 914-ல் வெற்றியும், 4303-ல் தோல்வியும் பாஜக அடைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதேபோல், நகர பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக 100-ல் வெற்றி பெற்று 337-ல் தோல்வியை சந்தித்துள்ளதாகவும், நகர பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கானதில் 4728-ல் தோல்வியும் 662-ல் பாஜகவிற்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இவற்றை பாஜகவிற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும் மறைத்து விட்டதாகவும் காங்கிரஸ் தலைவர் தீபக்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தீபக் கூறும்போது, ”அனைத்துப் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளையும் குறிப்பிடாமல் பாஜக அதிகம் வெற்றிபெற்ற மேயர் பதவியை மட்டும் ஊடகங்கள் பெரிதாகக் காட்டியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட அதிகமாகக் கிடைத்த 10 சதவிகித வாக்குகளை மீடியா கணக்கில் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தோல்வி பெற்ற பதவிகள் சுயேச்சைகளுக்கு அதிகமாகவும், மற்ற கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சென்றுள்ளன. இந்தமுறை எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் அம் மாநிலத்தின் முதல்வரே தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார். இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக ஆம் ஆத்மி

உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக தன் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. இதில், அக்கட்சிக்கு 2 நகரப் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன. உறுப்பினர்களில் முனிசிபல் வார்டுகள் 2, நகரசபை 17 மற்றும் நகரபஞ்சாயத்து 19 ஆகியவற்றிலும் ஆம் ஆத்மியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இக்கட்சி சார்பில் அதன் இரண்டாம்கட்ட தலைவர்கள் மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தனர்.

உவைஸி கட்சியின் போட்டி

ஆம் ஆத்மியைப் போல் முதன்முறையாக ஹைதராபாத்தின் மக்களவை உறுப்பினர் அசாதுத்தீன் உவைஸியின் மஜ்லீஸ்-எ-இத்தாஹுதுல் முஸ்லிமின் கட்சியும் போட்டியிட்டது. இதில் அதற்கு ஒரு நகரப் பஞ்சாயத்து தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதுவன்றி, உறுப்பினர்களாக முனிசிபல்களில் 12, நகரசபைகளில் 7 மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் 6-லும் வெற்றி பெற்றுள்ளனர்.