சென்னை மெட்ரோ ரயிலில் மேலும் இரு புதிய வழித்தடச் சேவை – தொடக்கம்! – AanthaiReporter.Com

சென்னை மெட்ரோ ரயிலில் மேலும் இரு புதிய வழித்தடச் சேவை – தொடக்கம்!

சென்னையில் மேலும் இரண்டு புதிய வழித் தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வருகிற மே.25-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதையொட்டி நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் (வெள்ளிகிழமை) கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். விழாவில் 6 ரயில் நிலையங்களும் திறக்கப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது விமான நிலையம் முதல் சின்னமலை வரையும் மற்றும் பரங்கிமலை முதல் நேரு பூங்கா ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள ஷெனாய் நகர் 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா-சென்டிரல் இடையிலான பணிகள் மற்றும் சின்னமலை-ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையிலான சுரங்க மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இந்த பாதையில் கடந்த 14-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ. மனோகரன் ஆய்வு செய்தார். அதனடிப்படையில் இந்த பாதையில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கு எந்த தடையும் இல்லை. பாதுகாப்பான முறையில் ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே பயணிகள் ரயிலை இயக்கலாம் என்று கூறி பாதுகாப்பு ஆணையர் அனுமதி சான்றிதழ் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழா 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12.30 மணிக்கு எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கிறது. விழாவில் பச்சை வழித்தடத்தில் நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் நீல வழித்தடத்தில் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப்சிங் புரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து பச்சை, நீல வழித்தடத்தில் உள்ள எழும்பூர், சென்டிரல், ஏ.ஜி-டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை ஆகிய 6 குளிரூட்டப்பட்ட சுரங்க ரயில் நிலையங்களுக்கான கல்வெட்டுகளையும் அவர்கள் திறந்து வைக்கின்றனர்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டி.ஜெயகுமார், எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அரசு செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா, மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக அலுவலர் பங்கஜ் குமார் பன்சால், தமிழக அரசு முதன்மைச் செயலாளர் (திட்டம், வளர்ச்சி) டி.வி.சோமநாதன் உள்ளிட்ட அதிகரிகள் பலர் கலந்துகொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.