குக்கர் சின்ன வழக்கில் தீர்ப்பு வந்த மறுநாள் அம்முக -வினர் வேட்புமனு தாக்கல் – தினகரன் பேட்டி!

குக்கர் சின்ன வழக்கில் தீர்ப்பு வந்த மறுநாள் அம்முக -வினர் வேட்புமனு தாக்கல் – தினகரன் பேட்டி!

நேஷனல் லெவலில் செல்வாக்குப் பெற்ற கட்சிகளுடன் இங்குள்ள முக்கியக் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையில்  “அமமுக வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதி யிலும் ஒவ்வொரு சின்னத்தில் நின்றாலும் மாபெரும் வெற்றியைப் பெறுவோம்” என்று அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன்  நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிவிட்டன. அமமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் திருச்சியில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். இதனையடுத்து திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக தேர்தல் அலுவலகத்தை தினகரன் நேற்று துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் ஆணையமும் சரி,அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களும் சரி எந்த தடையை ஏற்படுத்தினாலும் எங்கள் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதை யாராலும் தடுக்க முடியாது. மக்களின் ஆதரவால் நாங்கள் மாபெரும் வெற்றிபெறுவோம். அதிகார துஷ்பிரயோகம், மத்திய அரசின் அச்சுறுத்தல் என பல்வேறு தடைகளைத் தாண்டி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றிபெற்றோம். திருவாரூக்கு தேர்தல் நடந்திருந்தால் அங்கும் வெற்றிபெற்றிருப்போம். எங்களுக்கு பயந்துதான் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மக்களவைத் தேர்தலைத் தள்ளிவைக்க முடியாது என்பதால், தேர்தல் நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு, “மே மாதம் தமிழகத்தில் பெரும் புயல் வரக்கூடும் அல்லது ஏப்ரல் 18ஆம் தேதி பெரும் பூகம்பம் வரக்கூடும் என்று ஏதாவது வானிலை அறிக்கையை காரணம் காட்டி இடைத் தேர்தலை நிறுத்தி வைத்தாலும் வைக்கலாம்” என்று பதிலளித்தார்.

சின்னம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தினகரன், “குக்கர் சின்னம் கேட்டு நாங்கள் தொடர்ந்த வழக்கு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் எந்த சின்னம் என்ற முடிவு தெரிந்து விடும். அதற்கு அடுத்த நாள் நாங்கள் மனுதாக்கல் செய்வோம். தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீதிமன்றத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லையெனில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் என ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு சின்னத்தில் நின்றால் கூட இவர் அமமுக வேட்பாளர் என்று மக்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்கள் எங்களுக்கு வெற்றியைத் தருவார்கள்” என்று தெரிவித்தார்

error: Content is protected !!