இரட்டை இலை எனக்குத்தான் : சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் டிடிவி தினகரன்!

இரட்டை இலை எனக்குத்தான் : சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் டிடிவி தினகரன்!

தமிழகத்தின் பெரும்பான்மையான வாக்குகளை அள்ளும் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியானது, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி என்றும், அதேபோல் அதிமுக அம்மா அணி என்று டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்தனர்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ஓரணியாக இணைந்ததையடுத்து அவர்களது அணிக்கு மட்டுமே அதிகப்படியான பெரும்பான்மை உள்ளதாக கூறி, அதிமுக கட்சி இரட்டை இலை சின்னம், ஆகியவற்றை மதுசூதனன் தலைமையிலான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த வாரம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னம், தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் சரியாக பரிசீலனை செய்த பின்னர் தான் இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது.அதனால் இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இதில் மதுசூதனன் தலைமையிலான ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் டிடிவி தினகரன் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மதுசூதனன் தலைமையிலான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் போலியான உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய, பிரமாணபத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதனை சரிவர ஆய்வு செய்யாமல், தலைமை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு சாதகமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையே டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இது ஒருதலை பட்சமான ஒன்றாகும்.

அதனால் மேற்கண்ட வழக்கு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். அதுவரை எங்களுக்கு குக்கர் சின்னம் வழங்க வேண்டும். வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரணை மேற்கொண்டு ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!