உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்! – தினகரன் அறிவிப்பு!!

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்! – தினகரன் அறிவிப்பு!!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்ம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று  தினகரன் உறுதி பட தெரிவித்து உள்ளார். இது குறித்து, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறுகையில், “வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.மு.மு.க. போட்டியிடும். இந்த தேர்தல் தொடர்பாக வருகிற 22-ந் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்படும்.

ரஜினிகாந்த், தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என கூறியிருப்பது உண்மை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவேன் என நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்று அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் உள்ளது ஒரு கம்பெனி தான். கட்சி இல்லை. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க.வை தோற்கடிப்போம்.

எங்களது கட்சியை டெல்லி தேர்தல் கமி‌‌ஷனிடம் பதிவு செய்துள்ளோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு நினைவூட்டல் கடிதம் இன்று (அதாவது நேற்று) அனுப்பி உள்ளேன்.

தனிச்சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என அனைத்து நிர்வாகிகளும் விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என ஆட்டம் போடுகிறார்கள். இடைத் தேர்தலை பொறுத்த வரையில் ஆளும் கட்சியினர் வெற்றி பெறுவது அதிசயம் இல்லை. அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆட்சி இருக்கும் வரை ஆட்டம் போடுவார்கள். மேலே உள்ளவர்கள் கைவிட்டு விட்டால், இவர்கள் ஆட்டம் முடிந்து விடும்” என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

error: Content is protected !!