ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே! – AanthaiReporter.Com

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே!

இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது டிரம்ப் நிர்வாகத்தில் இணையும் முதல் பெண் என்ற பெருமை நிக்கிக்கு கிடைத்துள்ளது. மேலும், அமெரிக்க அரசில் அமைச்சரவை அந்தஸ்தில் நியமிக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பும் இவருக்கு உள்ளது.

un nov 23

தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தற்போது செயல்பட்டு வருகிறார் நிக்கி ஹாலே (44). இந்திய வம்சாவளியினரான இவர், குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்டு டிரம்ப் மீது சில காட்டமான விமர்சனங்களை நிக்கி ஹாலே முன்வைத்தார். இதனால், 2 பேருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தற்போது, டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதால், வெளியுறவு அமைச்சர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கருத்து வேறுபாடு இருந்தாலும், நிக்கி ஹாலேவை விட்டால், அந்த பதவிக்கு, குடியரசுக் கட்சியில் தகுந்த நபர் யாரும் இல்லை. இதனால், அவரையே வெளியுறவு அமைச்சராக, டிரம்ப் நியமிப்பார் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், நிக்கி ஹாலேவை, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக நியமித்து, டொனால்டு டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தன்னை விமர்சிக்கக்கூடிய நபராக இருந்தாலும், அவரது செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் பாராட்டப்பட வேண்டியவை என, டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, செனட் ஒப்புதலைப் பெற்று, நிக்கி விரைவில் பதவியேற்க உள்ளார்.

அதேசமயம், பிரச்னைக்குரிய நபர் என்பதால், நிக்கியை தனது அமைச்சரவையில் வைத்துக் கொள்ள டிரம்ப் விரும்பவில்லை என்றும், அவ்வாறு செய்தால் உள்கட்சிப் பூசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.