முத்தலாக் சட்டம் : மீண்டும் மக்களவையில் தாக்கல்! – AanthaiReporter.Com

முத்தலாக் சட்டம் : மீண்டும் மக்களவையில் தாக்கல்!

முஸ்லீம் பெண்களின் வாழ்க்கைய நிர்மூலமாக்கும்  முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும், இதற்கு எம்.பி.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று (ஜூன் 20) கூறியிருந்த நிலையில் இன்று, முத்தலாக் தடை சட்ட மசோதா மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

முஸ்லிம்களிடையே உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. சமீபத்தில், 16ஆவது மக்களவையின் 5 ஆண்டு காலம் முடிவடைந்து புதிய மக்களவை தேர்வு செய்யப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.

இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா இன்று (ஜூன் 21) மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார். முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 என்று அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் எதிர்ப்புத் தெரிவித்தார். உடனடி முத்தலாக் முறையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள அவர், முத்தலாக் முறை என்பது குற்றமாக சித்தரிக்கப்படுவதையும் எதிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.