போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை! – AanthaiReporter.Com

போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை!

போக்குவரத்து இரைச்சலால் டிராபிக் இரைச்சலால் ஹார்ட் அட்டாக் வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டி ருந்த நிலையில் தற்போது இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று 8 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய காதுகள் சப்தங்களைக் கேட்பதற்கு மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். காது வழியாக நாம் சப்தத்தைக் கேட்பதால்தான்  பேசவே முடிகிறது.  ஒவ்வொரு குழந்தையும் சப்தத்தை கிரகித்தப் பிறகுதான் பேசவே ஆரம்பிக்கின்றன.  மேலும் தூக்கத்தின் போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வு எடுக்க ஆரம்பித்தால், கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தி ஓய்வெடுப்பது காது. அதேபோல், விழிக்கும்போதும் முதலில் செயல்படத் தொடங்குவதும் காதுதான். எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். இதன் முக்கியத்துவத்தை உணராமல், ‘காது வலிதானே!’ என்று அசட்டையாக இருந்துவிட்டால் ஒலியையே நாம் கேட்க முடியாத பரிதாப நிலை ஏற்படலாம். எனவே காது மீது கவனம் செலுத்தவேண்டும்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல் நலக்கோளாறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து சியோல் நே‌ஷனல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அதிக அளவு போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   2 லட்சத்து 6 ஆயிரத்து ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20 முதல் 59 வயதுடைய வர்களிடம் 8 ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக இரவு நேரத்தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிவோர் அல்லது தங்கியிருப்போர் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர். ஒலி அளவு 55 டெசி பில்சுக்கு மேல் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் ஒலி அளவு 40 டெசிபிலுக்கு மேல் இருக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர இதய நோய்கள், மனநிலை பாதிப்பு மற்றும் நடவடிக்கை களில் மாற்றம் போன்றவை உருவாகும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.