குரூப் 4 தேர்வில் முறைகேடு ;99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை! – AanthaiReporter.Com

குரூப் 4 தேர்வில் முறைகேடு ;99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை!

கடந்த சில நாட்களாக சேனல்களின் தலைப்புச் செய்திகளிலும்,  நாளிதழ்களில் முதல் பக்கச்  செய்தியாகவும் இடம் பெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடபாக வெள்ளி யன்று மாலை கைதானவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை சிபிசிஐடி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர் பான விசாரணையில், 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் எப்போதுமே டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுது முடியாத வகையில் வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர், ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களின் அதிகாரிகள் உட்பட 12 பேரிடம் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர்.
எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர் என முதலில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கைதானவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை சிபிசிஐடி தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி டிபிஐ அலுவலக உதவியாளர் ரமேஷ், 2017இல் குரூப்-2(ஏ) தேர்வில் வெற்றிபெற்ற திருக்குமரன், தேர்வாளர் நிதிஷ்குமார் ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குரூப்-4 முறைகேட்டில் ராமேஸ்வரம், கீழ்க்கரை தேர்வு மையங்களில் பொறுப்பில் இருந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேர்வர்கள் சிலரை இடைத்தரகர்கள் அணுகி பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவமும் நடந்துள்ளது.

குரூப்-4 தேர்வில் கீழ்க்கரை, ராமேஸ்வரம் மையங்கள் தவிர வேறு எங்கும் முறைகேடுகள் நடைபெறவில்லை.

வழக்கில் முக்கிய பங்காற்றியவர்கள், இடைத்தரகர்கள் பற்றியும் பல கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான 3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.