நிர்வாகத் திறனில் தமிழ்நாடு அரசு முதலிடம் – மத்திய அரசின் புள்ளி விவர அறிக்கை! – AanthaiReporter.Com

நிர்வாகத் திறனில் தமிழ்நாடு அரசு முதலிடம் – மத்திய அரசின் புள்ளி விவர அறிக்கை!

தமிழகத்தில் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதவிக்கு வரும் முன்னர் பல பேருக்கு அவரை தெரியாது. ஒரு சாதாரண மனிதராகத்தான் இருந்தார். ஆனால் இன்று அ.இ. அ.தி.மு.க. கட்சியை ஒன்றிணைத்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு இணையாக போட்டி யிடும் நிலைக்கு அவர் வளர்ந்துள்ளார். அவர் ஆளுமை மிக்க ஒரு முதலமைச்சராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசின் நிர்வாகத்தில் எல்லா துறை களிலும் எல்லா பணிகளும் ஜரூராக நடப்பதாக பல்வேறு தரப்பிலும் செய்திகள் வந்த நிலையில் இந்திய அளவில் பல்வேறு துறைகளின் செயல்பாடு அடிப்படையில் நிர்வாகத் திறனில் தமிழ்நாடு அரசு முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை மிகச்சிறந்த நிர்வாகத்திறன் உள்ள மாநிலங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு 10 துறை களின் செயல்பாட்டு அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி பெரிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்,  வடகிழக்கு மற்றும் மலைபிரதேச மாநிலங்கள் என மாநிலங்கள் 3பிரிவாக பிரிக்கப்பட்டது.

மேலும் விவசாயம், சுகாதாரம், நிதி நிர்வாகம், மனித வள மேம்பாடு, வர்த்தகம், சமூக நலத்துறை, நீதித்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 துறைகளின் கீழ் மாநிலங்களின் செயல்திறன்கள் மதிப்பிடப் பட்டன. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மூன்று பிரிவிலும் மாநிலங்கள் செயல்திறன்படி பட்டியலிடபட்டு  இன்று தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி வெளியிடப்பட்டது.

அந்த வகையில்  பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலேயே நிர்வாகத் திறனில் தமிழ்நாடு 5.62 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரம் (5.40 புள்ளிகள்), 3வது இடத்தில் கர்நாடகம் (5.10 புள்ளிகள்) இடம்பிடித்துள்ளன.

பொது உள்கட்டமைப்புத் துறை மற்றும் நீதி, பொது பாதுகாப்புத்துறையிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

சுகாதார துறையில் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.

பொருளாதார நிர்வாகத்தில் தமிழ்நாட்டுக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கர்நாடகம், மகாராஷ்டிரா, தெலுங்கானா குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் 4 இடத்தை பிடித்துள்ளன.

சுற்றுச்சூழலில் 3வது இடத்திலும்,

வேளாண்மையில் 9வது இடத்திலும்,

வணிகத்தில் 14வது இடத்திலும்,

சமூக நலனில் 7வது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.

யூனியன் பிரதேசங்களில் சிறப்பான நிர்வாக திறன் கொண்ட மாநிலமாக புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் பிரிவில் இமாச்சல பிரதேசம் முதல் இடம் பிடித்துள்ளது.

மனித வள மேம்பாட்டுத் துறையிலும் புதுச்சேரி மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்கள் அதனதன் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளன.

தமிழ்நாட்டைப்போல் நீதி மற்றும் பொது பாதுகாப்புத்துறையிலும் சிறந்த யூனியன் பிரதேசமாக புதுச்சேரி முதல் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “அறிவியல்பூர்வமாக பல்வேறு அளவு கோலின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.