தேர்தல் முடிவுகள் : தமிழகக் கட்சிகளில் ரியாக்‌ஷன்! – AanthaiReporter.Com

தேர்தல் முடிவுகள் : தமிழகக் கட்சிகளில் ரியாக்‌ஷன்!

பார்லிமெண்ட் தேர்தல் முடிவு முன்னணி நிலவரங்களில் தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்வி முகத்தில் இருந்தாலும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் தமிழகத்தில் ஆளும் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தாலும், இடைத் தேர்தல் முடிவு அ.தி.மு.க. ஆட்சிக்கு சாதகமாக அமைந்த தால் அக்கட்சி தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து நீங்கியதை யடுத்து, அக்கட்சி தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா உருவச்சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடந்து முடிந்தத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் அதிகளவில் திரண்டனர். மகளிரணியை சேர்ந்த பெண்கள் உற்சாக மிகுதியில் குத்தாட்டம் போட்டனர். சரவெடி பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தி.மு.க.வின் வெற்றியை கொண்டாடினர். பா.ம.க. தோல்வியை சந்தித்ததால் அக்கட்சியின் சின்னமான மாம்பழத்தை தி.மு.க. தொண்டர்கள் சிலர் கையால் நசுக்கி தூக்கி எறிந்தனர்.

தமிழகத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் மகுடம் சூடினாலும், மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் காங்கிரஸ் கட்சியினர் கவலை அடைந்தனர்.இதனால் ராயப் பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்திய மூர்த்திபவன் அலுவலகம் நேற்று காலையில் வெறிச்சோடி இருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மாலையில் சத்திய மூர்த்திபவன் அலுவலகத்துக்கு வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினர். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் தான் அனைத்துக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமாக அமைந்தது. இந்நிலையில் தமிழக சட்டபேரவையில் ஒரு எம்எல்ஏவை இழக்கிறது திமுக கூட்டணி.காங்கிரஸ் எம் எல் ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து நாங்குநேரி சட்டபேரவை தொகுதி காலியாகிறது என்பது குறிப்பிடத்தக்க்து