திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தள்ளிப் போனது ஏன்? அரசு தரப்பு தகவல்! – AanthaiReporter.Com

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தள்ளிப் போனது ஏன்? அரசு தரப்பு தகவல்!

தமிழக அரசியல் கட்சிகளில் பெரும்பாலானோர் எதிர்பார்த்த திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்துள்ள தலைவர்கள், தேர்தல் தேதியை உடனே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக “மழை காரணமாக தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதால் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்கான தேதியை தற்போது அறிவிக்க இயலாது” என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தலை தள்ளிவைக்க ஆணையம் கூறும் காரணம் பொருத்தமானதாக இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள தலைவர்கள், தேர்தலை உடனே நடத்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரியது ஏன் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியினை தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் நேற்று அறிவித்தார். இதனுடன் சேர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங் குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மழை, தேர்தல் வழக்கை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை இப்போது அறிவிக்கக்கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்

வழக்கத்தை விட 12 சதவீதம் அளவிற்கு, வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் உள்ள திருவாரூர் கடந்த மூன்று ஆண்டுகளாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மழை மற்றும் புயலால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் முடிவுக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரவணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருவதால் தற்போது இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.