அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சி விழாவில் முதல்வர் அறிவிப்பு! – AanthaiReporter.Com

அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சி விழாவில் முதல்வர் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டிய அறிவிப்பு என்று சர்ச்சை வரும் என்று தெரிந்தும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை வைத்திருப் பவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும் என்ற  செய்தியை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

34–வது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார். இந்த விழாவில் ரூ.24.77 கோடியில் முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் துவக்கி வைத்தார். ரூ.195.6 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை புள்ளி விவரங்களுடன் முதலமைச்சர் பட்டியலிட்டு, ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

முன்னதாக இந்த விழாவுக்கு கள்ளக்குறிச்சி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

நான் வருகின்றபொழுது, தைப்பொங்கல் வரவிருப்பதால், இந்த ஆண்டு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று பொதுமக்கள் என்னிடத்தில் கேள்வி எழுப்பினார்கள். உங்கள் கோரிக்கை அரசின் பரிசீலினையில் இருந்து கொண்டிருக்கிறது, அதுகுறித்த நல்ல அறிவிப்பை நான் இப்பொழுது செல்லும் விழாவில் அறிவிப்பேன் என்று நான் கூறினேன்.

அதனடிப்படையில் தைப்பொங்கல் பண்டிகை தமிழர்களின் தனிச்சிறப்புமிக்க பண்டிகை. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். தமிழர் மரபையும், பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்தும் இவ்விழா, தமிழ் மக்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு. எனவே தான், சென்ற ஆண்டு வறட்சியின் பாதிப்பு, ஏழை மக்களை பாதிக்காத வண்ணம், அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் குடும்பத்திற்குத் தலா ரூபாய் ஆயிரம் பரிசையும், பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப் படுவதற்காக அம்மாவின் அரசு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

பொங்கல் பரிசு

இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள பணத்தை இடுபொருள்களுக்கும், பிற பணிகளுக்கும் செலவழித்துவிட்ட நிலையில் அவர்கள் போதிய வருவாய் இன்றி சிரமப்படும் ஏழைக் குடும்பங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட, சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும், குடும்பத்திற்குத் தலா 1000 ரூபாயுடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அண்ணா தி.மு.க. அரசு”என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.