மாணவர்கள் தற்கொலை: தமிழ்நாட்டுக்கு 3வது இடம்! – AanthaiReporter.Com

மாணவர்கள் தற்கொலை: தமிழ்நாட்டுக்கு 3வது இடம்!

நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மாணவர்கள் தற்கொலை விகிதம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது நாடு ழுழுவதும் 2014-ம் ஆண்டு 8068 மாணவர்கள் தற்கொலை செய்தனர். 2015-ல் இது 8934 ஆக அதிகரித்தது. 2016-ல் 9474 மாணவர்கள் தற்கொலை செய்ததாக அதிலும்  தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.68 மாணவர்கள் தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய கல்வி முறையின் கட்டாயங்களுடன் இணைந்து செல்ல முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனச்சோர்வாக மாறுகிறது. மனச் சோர்வு ஒரு கட்டத்தில் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கும், மதுவுக்கும் மாணவர்களை அடிமையாக்குகிறது. மனச் சோர்விலிருந்து மதுவும், போதைப் பொருட்களும் நிம்மதி அளிப்பதாக கருதும் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அவற்றுக்கு அடிமையாகி விடுவதால் கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மது மற்றும் போதைக்கு அடிமையாகும் மாணவர்களில் 10 முதல் 15 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொள்வதாக பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், மரபுவழிப் பிரச்சினைகள் என பல காரணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட முதன்மையானது கல்வி சார்ந்த பிரச்சினைகள் தான். மாணவர்களின் மாநில வாரியான தற்கொலை எண்ணிக்கையை வைத்தே இதை உறுதி செய்து கொள்ள முடியும்.

ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் மிக எளிமையான, அதேநேரத்தில் சிந்தனையைத் தூண்டும் கல்வி முறை இருப்பதால் அங்கு மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கல்வி என்பது சுகமான அனுபவமாக இருப்பதற்கு மாறாக திணிக்கப்படும் ஒன்றாகவும், எந்திரத்தனமான ஒன்றாகவும் மாறி விட்டது தான் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதற்கு காரணம் ஆகும்.

இந்நிலையில்தான் 2016-ம் ஆண்டு கணக்கின்படி நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் அதிக மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அங்கு 1350 பேர் உயிரை மாய்த்திருக்கிறார்கள். மேற்குவங்காள மாநிலத்தில் 1147 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. மாணவர் தற்கொலையில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. இங்கு 2016-ல் 981 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

இது  குறித்து  சென்னை சிம்ஸ் ஆஸ்பத்திரி மனதத்துவ டாக்டர் விவியன் கபில் கூறும்போது, ஒரு மாணவனின் ஆற்றலை பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவருடைய கல்வி அறிவை வைத்தே எடை போடுகிறார்கள். அதில் அவர்கள் தோல்வி அடையும்போது, இதுபோன்ற தவறான முடிவுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் நிலையை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீது அதிக அழுத்தத்தையும், எதிர் பார்ப்புகளையும் திணிக்க கூடாது என்று கூறினார்.

அப்போலோ ஆஸ்பத்திரியின் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ராமன் கூறும்போது, ‘ தன்னம்பிக்கை யில் பாதிப்பு ஏற்படுவது, ஒரு வி‌ஷயத்தில் ஆர்வமில்லாமை, சில வி‌ஷயங்களில் அடிமையாவது போன்றவை தற்கொலைக்கு இழுத்து செல்கிறது. அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டால் இதுபோன்றவற்றை தடுத்து விடலாம் என்று கூறினார்.