பிரதமர் மோடியை சந்தித்த போது பேசியது என்ன? முதல்வர் எடப்பாடி விளக்கம்! – AanthaiReporter.Com

பிரதமர் மோடியை சந்தித்த போது பேசியது என்ன? முதல்வர் எடப்பாடி விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கடந்த வாரக் கடைசியில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்று கூறப்படவில்லை. இந் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி மனுவையும் அளித்தார். அம்மனுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை யும் வைக்கப்பட்டுள்ளதாம். சினிமாவில் மற்றும் அரசியலில் ஜெயலலிதாவின் சாதனையை பாராட்டி இந்த விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் கூறினார். மேலும் அறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னம் வழங்க கோரிக்கைக் கூட வைக்கப் பட்டுள்ளது. அத்துடன் தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஆலோனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்காக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூர் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மேலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக் கான மத்திய அரசின் நிதி அதிக அளவில் நிலுவையில் உள்ளது. தமிழக அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் கே.பழனிசாமி நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் சென்றுள்ளார். டெல்லியில் முதல்வரை தமிழக எம்.பி.க்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி இன்று காலை சந்தித்தார். அப்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு நிதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பிரதமருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசித்தாக கூறப்படுகிறது.

இதன் பிறகு நிருபர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டும். கர்நாடக அரசின் மேகதாது நீர் தேக்க திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன். காவிரியில் அணை கட்ட அது தொடர்பான மற்ற மாநிலங்களின் சம்மதத்தை பெற்றாக வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளேன். காவிரி மறுவாழ்வு திட்டத்ததிற்கு புதிய அனுமதி வழங்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான போஸ்ட் மெட்ரிக்ஸ் திட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் அதே தொகையை வழங்க வசதியாக நிலுவை தொகையை வழங்க கேட்டுக்கொண்டேன்.

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினேன். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்தில் திட்டங்களின் நிலை குறித்து தெரிவித்து நிலுவை நிதியை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளேன்.

மீனவர்கள் மீட்பு பணிக்கு குமரியில் நிரந்தர கடற்படைத் தளம் அமைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல் பிரதமர் உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்

மேலும் ‘திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எதிர்க்கட்சிவைக்கும் ஊழல் புகார் பற்றி கேட்கின்ற னர்.காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். டிடிவி தினகரனை, துணை முதலமைச்சர் சந்தித்தது பற்றி கேட்கிறார்கள். அதுபற்றி துணை முதலமைச்சர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார். ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி கேட்கிறீர்கள். தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருப்பதால் இப்போது கூட்டணிக்கு அவசரமில்லை’ என்றார்