மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேனா? – எடப்பாடி பேட்டி வீடியோ! – AanthaiReporter.Com

மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேனா? – எடப்பாடி பேட்டி வீடியோ!

பிற மாநிலங்களில் தமிழை பயிற்றுவிக்க வேண்டும் என்று ட்விட்டரில், பிரதமருக்கு தாம் விடுத்த கோரிக்கை, திரித்துக் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றே ட்விட்டரில் பதிவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

கடந்த ஓரிரு வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்கான மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன்? என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக கோவை விமானநிலையத்தில் வியாழக்கிழமை நடந்த செய்தி யாளர்கள் சந்திப்பின் போது அவர், “பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் கோரிக்கை வைத்ததால் தான், பிற மாநிலங்களில் தமிழை விருப்ப பாடமாக வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் பயில வேண்டும் என்றே கோரிக்கை வைத்தேன், வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றே ட்விட்டரில் பதிவு செய்தேன்.

நான் விடுத்த கோரிக்கையில் என்ன தவறு உள்ளது? மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன்? இரு மொழிக் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. இதில் அரசின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கர்நாடக அரசை ராகுல் வலியுறுத்தாதது ஏன்? கர்நாடக தேர்தல் பிரசாரத்தில், தான் பிரதமரானதும் காவிரி ஆணையத்தை கலைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார், இதனை இங்குள்ள கட்சிகள் கண்டிக்கவில்லை.

தமிழகத்திற்கான பங்கு நீரை பெற திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் கர்நாடக அரசை வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன். குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதால் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்தன. ஆனால், நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை எதிர்க்கட்சிகள் அளித்தன.

7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு அதிமுக அரசு அனுப்பியுள்ளது. நளினியை தவிர 6 பேரையும் விடுவிக்கக் கூடாது என கூறி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுகவுக்கு கேள்வி கேட்க உரிமையில்லை.

தண்ணீர் தட்டுப்பாடுகளை கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பருவமழை பெய்யாததால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்து மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.