.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் ஆட்சி – எடப்பாடி பேச்சு முழு விபரம்!

.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் ஆட்சி – எடப்பாடி பேச்சு முழு விபரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.

கொடியேற்றிய பின்னர் அவர் ஆற்றிய உரை முழு விபரம் இதோ:

அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தினையும், இனிய சுதந்திர தின நல்வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடிமை இந்தியாவை சுதந்திர இந்தியாவாக்கி நம் கைகளில் ஒப்படைப்பதற்காக அரும்பாடுபட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள். நம்நாட்டின் விடுதலைக்காக அயராது போராடிய பெரும்தலைவர்க ளுக்கும், பல ஆயிரக்கணக்கான சுதந்திர வீரர்களுக்கும், இந்நன்னாளில் வீர வணக்கம் செலுத்துவோம்.

நாட்டின் வளர்ச்சி என்பது தனிமனிதன் முன்னேற்றத்தை அளவு கோலாகக் கொண்டது. சமுதாயத்தின் அடித்தளத்திலிருக்கும் ஒரு தனிமனிதன் அடிப்படை தேவைகளான பொருளாதாரம், உணவு, கல்வி, குடியிருப்பு, சுகாதாரம், தொழில், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு போன்ற அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? என்பதை உறுதிப்படுத்துவதில் தான் சுதந்திரத்தின் வெற்றி இருக்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு அளப்பறிய முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் முன்னேறி, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தோடு, எங்கள் எதிரில் வருகின்ற தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு தமிழக மக்களுக்கு சேவை ஆற்றுவது மட்டுமே இலக்காகக் கொண்டு உழைத்து வருகின்றோம்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை மாநிலம் முழுவதும் நிறைவடைந்த 6 ஆயிரத்து 772 கோடியே 25 இலட்சம் மதிப்பீட்டிலான 33 ஆயிரத்து 139 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தும், ஆயிரத்து 114 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 ஆயிரத்து 199 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்துள்ளேன். ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு குறுகிய காலத்திலேயே இப்பணிகளை செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்வித்தரத்தைக் கொண்டுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம் கணக்கிடப்படுகின்றது என்பதால் பள்ளிக்கல்வித்துறைக்கு முன்னுரிமை கொடுத்து 2017-2018ஆம் ஆண்டுக்கு 26 ஆயிரத்து 932 கோடியே 31 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் கணினி அறிவு பெற உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்438 கோடி ரூபாய் செலவில் உயர்தொழில்நுட்பக் ‘கணினி ஆய்வகங்கள்’, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி களுக்கு 60 கோடி ரூபாய் செலவில் ‘அறிவுத்திறன் வகுப்பறைகள்’ மற்றும் நடப்பாண்டில் 391 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளுக்கு „உள் கட்டமைப்பு வசதிகள்’ செய்யப்படும்.

தமிழக அரசு, பொது சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 2012-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 20 இலட்சத்து 19 ஆயிரத்திற்கு மேலான நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

2011-12ஆம் ஆண்டில் இரண்டாம் பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 2011ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு வரை நான்கு முறை தமிழ்நாடு, 100 இலட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்து உயரிய சாதனை படைத்துள்ளது. இதற்கென மத்திய அரசிடமிருந்து கடந்த 5 ஆண்டுகளில், நான்கு முறை கிருஷி கர்மான் விருதினை, தமிழ்நாடு பெற்றுள்ளது. தென்னை விவசாயிகள் வளம் பெற, தென்னையிலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய மாண்புமிகு அம்மாவின் அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்னை விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயரும்.வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இடுபொருள் மானிய நிவாரணமாக 2 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும், அரசு எடுத்து வரும் தொடர் முயற்சியினால், புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 1882 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடையும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10,000/- ரூபாய் 20,000/- ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நடைமுறையில் இருந்த குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக, குடும்ப அட்டைதாரர்களின் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குத் திட்டம் 01.04.2017 அன்று துவக்கி வைக்கப்பட்டு, தற்போது மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மீனவர்களுக்கு புதிய தூண்டில் மற்றும் செவுள்வலையுடன் கூடிய சூரை மீன்பிடி விசைப்படகுகள் கட்டுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் தடையில்லாத மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பு, தொழிலாளர் திறன், இலகுவான வழிமுறைகள் ஆகியவற்றால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

தொழில்துறையில் பல மாற்றங்கள் செய்து தமிழ்நாட்டில் எளிதாக முதலீடு செய்ய வழிவகை செய்துள்ளது. 2011ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை , அந்நிய நேரடி முதலீடாக ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 19 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது.

தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய தென் மாவட்டங்களான இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 19 ஆயிரத்து 615 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற் பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கத்தை எய்திட பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு 2015-2016ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை, 11 ஆயிரத்து 457 கோடி ரூபாய் செலவில், 3 லட்சத்து 27 ஆயிரத்து, 714 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

2016-2017ஆம் ஆண்டில் 22 இலட்சத்து 71 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் 901 கோடியே 33 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை இரட்டிப்பாக்கப்பட்டதன் மூலம் கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 57 ஆயிரம் பயனாளிகளுக்கு, 13 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பங்களிப்புடன், ஏரிகளின் நீர்வளத்தை அதிகரிப்பதற்காக குடிமராமத்து பணிகள் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது.

முதற்கட்டமாக, 1519 ஏரிகளில் 100 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை முடியும் தருவாயில் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2065 ஏரிகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 23 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக நீர் வள, நில வள திட்டம் மூலம் 787 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 220 பணிகள் தற்போது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. நிலத்தடி நீரை செறிவூட்டவும் ஆறுகளிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லவும், புதிய தடுப்பணைகள் நிலத்தடி கீழ் தடுப்புச் சுவர்கள் மற்றும் அணைக்கட்டுகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 இடங்களில் தடுப்பணைகள் மற்றும் நிலத்தடி கீழ் தடுப்புச்சுவர்களும், 10 இடங்களில் அணைக்கட்டுகளும் கட்டப்படும். பொதுமக்களுக்கு தங்குதடையின்றி மணல் கிடைப்பதற்காக மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சின்னத்திரை, பெரியதிரை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்விருதுகள் விரைவில் வழங்கப்படும்.நாட்டின் முன்னேற்றம் கருதி, அனைத்துத்தரப்பு மக்களின் நலன் கருதி, இந்த அரசு பல புதிய திட்டங்களை வகுத்து அதனை விரைந்து செயல்படுத்துவதிலும், திட்டப் பலன்கள் பயனாளி களுக்கு விரைந்து முழுமையாக சென்றடைவதைக் கண்காணிப்பதிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது.

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாக செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே, அடிமை விலங்கை தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழ்நாடு. நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தங்களின் சொந்த நலன்களைக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்த தியாகச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்; சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும், மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்கவும், இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், அதில் தமிழ்நாட்டை வளம் மிக்க மாநிலமாக ஆக்கவும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும் என உறுதியளிக்கிறேன்.

error: Content is protected !!