தமிழக தேர்தல் கள இறுதி வேட்பாளர் பட்டியலும் ரிலீஸ்! – AanthaiReporter.Com

தமிழக தேர்தல் கள இறுதி வேட்பாளர் பட்டியலும் ரிலீஸ்!

நம்ம தமிழக அசெம்பிளிக்கான எலெக்சன் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. 6 நாட்களில் மொத்தம் 7 ஆயிரத்து 151 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஆண்கள் 6 ஆயிரத்து 352 பேர். பெண்கள் 795 பேர். மூன்றாம் பாலினத்தவர் 4 பேர்.

வேட்பு மனு பரிசீலனை கடந்த 30-ந் தேதி நடைபெற்றது. அப்போது தேர்தல் அதிகாரி மற்றும் மத்திய பார்வையாளர் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. பெரும்பாலான மனுக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் முன்மொழியாதது, தேர்தல் கட்டணம் செலுத்தாதது என்பன உள்பட பல்வேறு காரணங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டன.
tn asse apr 22
மேலும் அங்கீகரிக் கப்பட்ட வேட்பாளர்களுக் காக தாக்கல் செய்யப்பட்ட மாற்று மனுக்கள் தானாகவே தள்ளுபடி ஆயின. அதன்படி 3 ஆயிரத்து 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 ஆயிரத்து 132 மனுக்கள்ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. அதன் முடிவில் 336 பேர் வாபஸ் பெற்றனர். அதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 794 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஆண்கள் 3 ஆயிரத்து 472 பேர். பெண்கள் 320 பேர். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் ஆவார்கள்.

இதில் அதிகபட்சமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேரும், குறைந்தபட்சமாக மயிலாடுதுறை, கூடலூர், ஆற்காடு ஆகிய தொகுதிகளில் தலா 8 பேரும் போட்டியிடுகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 ஆயிரத்து 748 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 794 பேர் போட்டியிடுகின்றனர்.

தற்போது வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்ட தகவல்களின்படி:

சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 684 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 72 ஆயிரத்து 601 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் ஆகியன விவரங்களைக் கொண்ட சீட்டு ஒட்டப்படும்.

இந்தச் சீட்டுகள் அந்தந்தத் தொகுதிகளிலேயே அச்சிடப்படும். இந்தப் பணி வரும் 3- ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி நிறைவடையும். தபால் வாக்குகள் உடனடியாக அச்சிட்டு வழங்கப்படும்.

தபால் வாக்குகளை வழங்குவதற்காக 97 சதவீத பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 3 சதவீதம் பேருக்கு வாக்காளர் பட்டியல் எண் மட்டும் பெறப்பட்டுள்ளன. எனவே, 100 சதவீத தபால் வாக்குகள் வழங்கப்பட்டு விடும்.

வாக்குப்பதிவின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒரு தொகுதியில் மகளிருக்கென தனி வாக்குச் சாவடி அமைக்கப்படும். அந்த வகையில், 234 வாக்குச் சாவடிகள் மகளிர் வாக்குச் சாவடிகளாக இருக்கும் என்றார் ராஜேஷ் லக்கானி.

87 தொகுதிகளுக்கு அதிகம்: 15 வேட்பாளர்களுக்கு அதிகமாக ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அங்கு இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஒரு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களும், ஒன்று நோட்டாவுக்கும் இடம் ஒதுக்கப்படும்.அதன்படி, 16 வேட்பாளர்களுக்கு அதிகமாக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 87-க்கு அதிகமாகும். இந்தத் தொகுதிகள் அனைத்திலும் இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர். தேமுதிக தலைவரும் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் போட்டியிடும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 25 வேட்பாளர்கள் களம் காண்கின் றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயிலில் 10 பேர் போட்டியிடுகின்றனர். அன்புமணி, தமிழிசை சௌந்தரராஜன் தொகுதிகளில்…: பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலைப் போன்றே பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை, ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 10 மடங்கு குறைவாக உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 2,748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், 2,611 பேர் ஆண்கள். 137 பேர் பெண்கள். இந்தத் தேர்தலில், 3,794 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அதில், 3,472 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள்; 2 பேர் மூன்றாம் பாலினத்தவர். முதல் முறையாக…: சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 2 பேர் களம் காண்கின்றனர்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது. இதற்காக தேர்தல் கமிஷன் ஏராளமான சின்னங்களை கைவசம் வைத்துள்ளது. அதிலிருந்து சுயேச்சைகள் விருப்பமான சின்னங்களை தேர்ந்தெடுத்தனர். ஒரே சின்னத்துக்கு இரண்டு பேர் போட்டியிட்டால் குலுக்கல் மூலம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலில் அகர வரிசைப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களின் பெயர்களும், அதைத் தொடர்ந்து பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்களின் பெயர்களும் அதன்பின்னர் சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்களும் இடம் பெறும்.
234 தொகுதிகளிலும், இறுதி வேட்பாளர் பட்டியல் நகல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.