மேகதாதுவில் அணை: சட்டசபையில் எதிர்ப்பு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம்! – AanthaiReporter.Com

மேகதாதுவில் அணை: சட்டசபையில் எதிர்ப்பு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம்!

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது.

சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசும் போது, “ மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் அனுமதி கொதிப்படைய வைத்துள்ளது. தமிழகத்தில் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அனைவரும் ஒருமித்த கருத்தோடும், மக்களின் உணர்வுகளை பிரபதிபலிக்கும் வகையில், இந்த தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிய விழைகிறேன். இதனை நிறைவேற்றி தர வேண்டும் என கோருகிறேன்” என்று கேட்டுக் ஒண்டார்.

இதை அடுத்து தொடர்ந்து அவர் தாக்கல் செய்த தீர்மானம்:

தமிழக சட்டசபையில் 5.12.2014, 27.3.2015 ஆகிய நாட்களில் கர்நாடகா அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல், கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்பதையும் மீறி, தற்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரமபக் கட்டப் பணிகளை துவக்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாக அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளத்துறை குழுமம் 22.11.2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் சட்டசபை கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து கொள்கிறது. மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என தமிழக சட்டசபை கேட்டு கொள்கிறது இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையை கூட்டியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. அணை விவகாரத்தில், தமிழக அரசு முன்பே தடை பெற்றிருக்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்றத்திற்கு முழுநேர தலைவர் இல்லை. கர்நாடகா அணை கட்ட சாதகமாக முழுநேர தலைவர் நியமனம் செய்யவில்லை என தெரிகிறது. காவிரியில் தண்ணீரை தேக்கி வைக்க அனுமதியில்லை. அணை கட்ட அனுமதி கூடாதென, மத்திய அரசிடம், தமிழக அரசு துணிச்சலுடன் போராட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் கே.ஆர்.ராமசாமி பேசியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிரான தனி தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மேகதாதுவில் ஒரு அணை கட்டப்படுகிறதா அல்லது இரண்டு அணை கட்டப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். தேர்தல் லாபம் அடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பின்னர் முதல்வர் அளித்த பதிலுரை: காவரி நீர் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நீராதாரமாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே, காவிரியில் பல அணைகளை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. காவிரி ஷரத்து ஒப்பந்தங்களை மீறும் வகையில், கர்நாடக அரசின் செயல் உள்ளது. காவிரி நீரில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது. பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகம் மிகவும் பாதிக்கப்படும். வறட்சி ஏற்படும். மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது கார்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி. மத்திய நீர்வளத்துறை ஆணையம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது இவ்வாறு முதல்வர் பேசினார்.

காவிரி பிரச்னை குறித்து கருணாநிதி செய்த விஷயத்தை மறைத்து பேசியது தவறு எனக்கூறி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். காவிரி பிரச்னை கர்நாடகாவிடம் முதலில் பேசியவர் கருணாநிதிதான் என துரைமுருகன் பேசினார். அவருக்கு பதிலளித்த முதல்வர், நாங்கள் செய்ததை நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் செய்ததை பேசலாம். நான் ஒரு விவசாயி. காவிரி பிரச்னை குறித்து எனக்கு தெரியும் என்றார்.

இதன் பின்னர் , திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் ஆதரவுடன், மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.