தமிழக சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்! – AanthaiReporter.Com

தமிழக சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்!

தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த இரங்கல் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியினுடைய மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

1937–ல் அரசுப்பள்ளிகளில் இந்திப் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதனைக் கண்டித்து, நீதிக்கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. 13 வயதிலேயே அன்னார் இந்தப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். தன் பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்ட அந்த சிறு வயதிலேயே ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

1942–ல் பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் அன்னார் எழுதிய இளமைப்பலி என்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு பேரறிஞர் அண்ணாவை பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக வந்திருந்த அவர், அன்னாரை அழைத்துப் பாராட்டினார்.

1957–ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள் நுழைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், 13 முறை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும், ஒரு முறை சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.

1967–ல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரான போது அன்னாரின் அமைச்சரவை யில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து திறம்பட பணியாற்றியவர்.

கலைஞர் 1969–ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அரசியல் மட்டுமன்றி, தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் தனக்கென தனி முத்திரைப் பதித்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். ‘பழனியப்பன்’ என்ற நாடகமே கலைஞர் முதன்முதலில் எழுதிய நாடகமாகும். திருவாரூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தார்.

தூக்குமேடை, சிலப்பதிகாரம், மணிமகுடம், ஒரே ரத்தம், காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக் கிழமை, திருவாளர் தேசியம்பிள்ளை, அனார்கலி, சாம்ராட் அசோகன், சேரன் செங்குட்டுவன், நாடகக்காப்பியம் உள்பட பல நாடகங்களை அவர் எழுதியவர். தூக்குமேடை நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைஞர் என்ற அடைமொழியை அவருக்கு வழங்கினார். நளாயினி, பழக்கூடை உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். புதையல், வான்கோழி, சுருளிமலை, ஒரு மரம் பூத்தது, ஒரே ரத்தம், ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். தென்பாண்டிச் சிங்கம் நாவல், 1989–ம் ஆண்டுக்கான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருதைப் பெற்றது. திருக்குறளை ஆய்ந்து எளிய நடையில் எழுதிய குறளோவியம், கலைஞரின் முக்கிய இலக்கியப் படைப்பாகும். நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை ஆறு தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.

சங்கத்தமிழ், தொல்காப்பிய பூங்கா, இனியவை இருபது, மேடையிலே வீசிய மெல்லியப் பூங் காற்று, மலரும் நினைவுகள், கலைஞரின் கவிதை மழை, இளைய சமுதாயம் எழுகவே உள்பட 178 நூல்களை கலைஞர் எழுதியுள்ளார். தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது.

தமிழ்நாட்டு அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர். கலைஞர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராட்டத்தக்க அளவில் பணி யாற்றி இருக்கிறார். அவரது ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், இயற்றப்பட்ட சில சட்டங்களையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மக்கள் நலன் கருதி அண்ணா தி.மு.க. சார்பில் நாங்கள் வரவேற்று இருக்கிறோம். அதே சமயத்தில், கொள்கை ரீதியில் மாறுபாடு இருக்குமேயானால், அதனை நாங்கள் எதிர்த்திருக்கிறோம். புரட்சித்தலைவி அம்மாவும், அதே போல நம்முடைய எதிர்க்கட்சித் தலைவரும், நானும் 1989–ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இம்மாமன்றத்தில் காலடி எடுத்து வைத்தபோது கலைஞர் முதலமைச்சராக இருந்தார்.

அப்போது நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் உரை யாற்றிய போது, ‘சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக இங்கே அறிவித்து இருக்கிறார்கள். இது ஒரு அரை லட்சியம் தான். ஆனால் நம்முடைய லட்சியம் லட்சம். இந்த லட்சத்தை வருகின்ற சட்டமன்ற கூட்டத்திலேயே லட்சியமாக அறிவிப்பதற்கும், இன்னும் பல கோரிக்கைகளை செய்வதற்கும் நம்முடைய முதல்வர் காத்திருக்கிறார்” என்று சொன்னார். உடன் பதில் அளித்த அன்றைய முதலமைச்சர் கலைஞர், என்னுடைய லட்சியம் உறுப்பினர் சிங்காரம் நீண்ட காலம், பல ஆண்டு காலம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும் என்பது தான்” என்று சொன்னார். கோரிக்கையை அப்போது ஏற்கவில்லை என்றாலும் கோரிக்கை வைத்தவர் மனம் மகிழ்கிற வகையில், பதில் சொல்கிற வல்லமை பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர்.

கலைஞர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, நானும், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தோம். வயது மூப்பின் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது, விரைவில் உடல் நலம் தேறி, மீண்டும் தன்னுடைய அரசியல் பணியைச் செய்வார் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்த நேரத்தில், அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி, எங்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. நானும், துணை முதலமைச்சரும், பேரவைத் தலைவரும் நேரிலே சென்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் அரசியல் வாழ்க்கைக்கு, அவரிடமிருந்த பன்முக ஆற்றல் காரணமாக அமைந்தது. அவர் கதை வசனம் எழுதிய ‘‘பராசக்தி” என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு பகுத்தறிவாளன் என்பதை சமுதாயத்திற்கு தெரியப்படுத்தினார். அதன் பிறகு அவர் கதை வசனம் எழுதிய படங்களில் எல்லாம் சமுதாய விழிப்புணர்வு கருத்துகளை பதிவு செய்து இருந்தார். ‘ராஜகுமாரி’, ‘மலைக்கள்ளன்’, ‘திரும்பிப்பார்’, ‘ராஜா ராணி’, ‘மந்திரி குமாரி’, ‘பூம்புகார்’, ‘மனோகரா’, ‘புதுமைப்பித்தன்’, ‘அரசிளங்குமரி’, ‘இருவர் உள்ளம்’, ‘எங்கள் தங்கம்’, ‘குறவஞ்சி’ என 75-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். கலைஞரின் ‘பொன்னர் சங்கர்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டது. எளிய தோற்றம், இனிய பண்பு, எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய குணம் அவரிடம் அமைந்திருந்தன.

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு முதல் தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களையும் கண்ட பெருமை அவருக்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, ஒருவர் பிறக்கிறார், வாழ்கின்றார், மறைகின்றார். அந்த இடைப்பட்ட காலத்திலே செய்த சாதனை என்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும். அந்த வகையிலே, கலைஞர் செய்த சாதனை இந்த மண்ணிலே நிலைத்திருக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அன்னாருடைய மறைவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை பிரிந்து வாடும் எதிர்கட்சி தலைவருக்கும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், எதிர்கட்சி துணைத் தலைவருக்கும், அவர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கருணாநிதி குறித்த இரங்கல் தீர்மானம் மீது திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, “என்னை இந்த மன்றத்தில் பேச அழைக்கும் போதெல்லாம் உணர்ச்சியோடு, எழுச்சியோடு எழுந்து நிற்பேன். ஆனால் இன்று கலைஞருக்காக இரங்கல் தீர்மானத்தில் பேச அழைத்த போது உடல் தளர்ந்து உள்ளம் சோர்ந்து துவண்ட நிலையில் இருக்கிறேன். 95 ஆண்டு காலம் வாழ்ந்தவர் கலைஞர். . தான் வாழ்ந்த நாளில் பாதி நாட்களுக்கு மேல் இந்த அவையில் அமர்ந்து பணி யாற்றியவர். 13 தேர்தல்களில் நின்று வென்றவர். எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், முதல்- அமைச்சர் என 56 ஆண்டு காலம் சட்டமன்றத்தில் பணியாற்றியவர். முதல்- அமைச்சராக 6863 நாட்கள் அதாவது 9 ஆண்டுகள் பணியாற்றினார். 17 ஆயிரத்து 908 நாட்கள் தி.மு.க. கட்சித் தலைவராக செயல்பட்டார். தமிழுக்காக, தமிழ் நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக உழைத்து விட்டு அண்ணாவின் பக்கத்திலே ஓய்வெடுக்கிறார் கலைஞர். எந்நாளும் தமிழர் மனங்களில் இருப்பவர் கலைஞர். எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர். ‘நான் 2007-ல் மடிந்திருந்தால் என் உடல் மீது கலைஞரின் கண்ணீர் விழுந்திருக்கும். எனக்கு இரண்டாவது உயிரை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. தனது பிள்ளைகளை விட எனக்கு அதிக உரிமை தந்தவர் கலைஞர்.என் மரணத்திற்குக் கலைஞர் கண்ணீர் விடுவார் என நினைத்தேன். ஆனால் அவர் மரணத்திற்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது. எந்நாளும் தமிழர் மனங்களில் அவர் இருப்பார்’ என்று உருக்கமாகக் கண்ணீர் மல்க பேசினார். ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்தி அமர்ந்து கதறி அழுதார். அப்போது அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.