10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு! – துணை முதல்வர் சமாளிப்பு! – AanthaiReporter.Com

10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு! – துணை முதல்வர் சமாளிப்பு!

10 சதவீத இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு ஏற்பாடு செய்த  அனைத்துக் கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும், சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் நிலையில், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் அதில் என்னென்ன பிரச்சினைகள் எழக்கூடும் என்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடி, தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, இளங்கோவன், பா.ம.க. தலைவர் கோ.க .மணி, ஏ.கே.மூர்த்தி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, உ.பலராமன், பாரதீய ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பால கிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், த.மா.கா. சார்பில் ஞானதேசிகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது அபுபக்கர், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர் கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு மாறாகவே, ஓர் அரசியல் சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து ‘பொருளாதார ரீதியாக’ என்று ஒரு புதிய பிரிவு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ‘பொருளாதாரப் பிரிவு’ இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப்போகச் செய்துவிடும். இடஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட தமிழக அரசு இடமளித்து விடக்கூடாது. முன்னேறிய சமுதாயத்துக்கு 10 சதவீத இடஒதுக் கீட்டை மருத்துவ கல்லூரிகளில் செயல்படுத்தினால் தமிழகத்துக்கு 25 சதவீத இடங்களை அதிகரிக்கிறோம் என்பதை நம்பி திராவிட இயக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிட வேண்டாம்.

தமிழ்நாட்டில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கும் அளவுக்கு முன்னேறிய வகுப்பினர் அதிக சதவீதம் இல்லை. ஆகவே நம் மாநிலத்துக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு பொருந்தாது. இந்த இட ஒதுக்கீடு மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், நம் மாநிலத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக் கீட்டை அடியோடு ரத்து செய்யும் உள்நோக்கத்துடன் தான் இந்த இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆகவே ‘முன்னேறியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறோம்’ என்று கூறப்படுவதற்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. திராவிட இயக்கத்தின் மூலாதாரமான சமூகநீதியை நிலைநாட்ட இந்த அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. உணர்வுப்பூர்வமாக முழு ஒத்துழைப்பு வழங்கும்”இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் சார்பில், தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதை ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இதே கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, “ஜெய லலிதா வகுத்துதந்த வழிமுறையின்படி தமிழக அரசு தொடர்ந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் கட்டிக் காத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16 ஆகியவற்றிற்கு உரிய திருத்தங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி 12.1.2019 அன்று அரசிதழில் அறிவிக்கை செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய சமூகநீதி அமைச்சகம், இந்த இட ஒதுக்கீட்டினை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒருவரின் வருடாந்திர குடும்ப வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளதன் அடிப்படையிலும், அவருடைய குடும்பத்தின் சொத்துக்களின் அடிப்படையிலும், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

அம்மா வழிகாட்டுதலின்படி, தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுமுறை பாதிக்கப்படாமல், இந்த இட ஒதுக்கீட்டினை இந்தக் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்காக, கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு இந்திய மருத்துவக் குழுமம் அனைத்து மாநில அரசுகளிடமிருந்து கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 24 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 3500 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், 15 விழுக்காடு இடங்கள், அதாவது 525 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்ட பின்பு, எஞ்சியுள்ள 85 விழுக்காடு இடங்கள், அதாவது, 2975 இடங்களில், தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான, இந்திய மருத்துவக் குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநில அரசு விண்ணப்பித்தால், கூடுதலாக 1000 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை பெற வாய்ப்புள்ளது. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 150 இடங்கள் போக தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கு 850 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

எனவே, மொத்தமாக மாநில ஒதுக்கீட்டில் வரக்கூடிய 3,825 இடங்களில், 383 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபின், தற்போது நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில், 586 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக கிடைக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை உருவாக்கி, இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விரிவான விளக்கங்களை முதற்கண் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் எடுத்துரைப்பார். அதனைத் தொடர்ந்து இப்பொருள் குறித்து கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது மேலான கருத்துக்களை எடுத்துரைக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.”இவ்வாறு அவர் பேசினார்.

ஆக இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பாரதீய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் ஆதரவும், தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட எஞ்சிய 16 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்தன