தமிழக +2 ரிசல்ட் வெளியானது! வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்! – AanthaiReporter.Com

தமிழக +2 ரிசல்ட் வெளியானது! வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்!

தமிழக பள்ளிகளில் நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப் பட்டுள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி ப்ளஸ் 2 தேர்வு தொடங்கியது. இதை 8 லட்சத்து 66,934 மாணவர்கள் எழுதினர். ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன. தொடர்ந்து, விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து, தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதம் ஆகும். மாணவர்கள் 87.7 சதவீதமும், மாணவிகள் 94.1 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 1 சதவீதம் மொத்த தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதமாக இருந்தது.

மாவட்ட அளவில் 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடமும், 96.2 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடமும் பிடித்துள்ளது. மொத்தம் 1,907 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடவாரியான தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை, தமிழ் பாடத்தில் 96.85 சதவீதம் பேரும், ஆங்கிலம் பாடத்தில் 96.97 சதவீதம் பேரும், இயற்பியல் பாடத்தில் 96.4 சதவீதம் பேரும், வேதியல் பாடத்தில் 95 சதவீதம் பேரும், உயிரியல் பாடத்தில் 96.3 சதவீதம் பேரும், கணிதம் பாடத்தில் 96.1 சதவீதம் பேரும், தாவரவியல் பாடத்தில் 93.9 சதவீதம் பேரும், விலங்கியல் பாடத்தில் 91.9 சதவீதம் பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 96.1 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில் 90.3 சதவீதம் பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 91.0 சதவீதம் பேரும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும், வரலாறு பாடத்தில் 89.19 சதவீதம் பேரும், பொருளாதாரம் படத்தில் 90.94 சதவீதம் பேரும், அரசியல் அறிவியல் பாடத்தில் 89.57 சதவீதம் பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 91.02 சதவீதம் பேரும், இந்திய கலாசாரம் பாடத்தில் 96.08 சதவீதம் பேரும், உயிரி வேதியல் பாடத்தில் 98.53 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், 1180 மதிப்பென்களுக்கு மேல் 231 பேரும், 1151-1180 மதிப்பென்கள் வரை 4,847 பேரும், 1126-1150 மதிப்பென்கள் வரை 8,510 பேரும், 1101-1125 மதிப்பெண்கள் வரை 11,739 பேரும், 1001-1100 மதிப்பெண்கள் வரை 71,368 பேரும் பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம். தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். அதேபோல், மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.