திருப்பதி லட்டு! – தெரியாத விஷயங்கள்!

திருப்பதி லட்டு! – தெரியாத விஷயங்கள்!

திருப்பதி லட்டுகளுக்கு விசேஷ ருசியும் தனித்தன்மையும் உண்டு. மற்ற லட்டு தயாரிப்புகளுடன் இதை ஒப்பிடவே முடியாது. இதில் சேர்க்கப்படும்.பொருட் களின் கலவை திருப்பதி லட்டு சுவைக்கே உரியதாகும். நாள்தோறும் குறைந்தது ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள நவீன சமையலறை கூடத்தில் லட்டு தயாரிப்பில் 150 பேர் பணியாற்றுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் இந்த லட்டுகளைத் தயாரிக்க நாள்தோறும் ஒரு டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ கற்கண்டு. 540 கிலோ உலர்ந்த திராட்சை பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருள்கள் அனைத்தும் கொச்சியில் உள்ள “கமாடிடிஸ் அண்ட் ஸ்பைசஸ் எக்ஸ்சேஞ்ச்’ மூலம் வாங்கப்படுகின்றன.

laddu

இந்த லட்டு தயாரிப்புக்கு என்னென்ன பொருள்கள் எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டுமென்பதை “திட்டம்’ என்ற பெயரில் குறித்துள்ளனர். இதில் சிறிதளவு குறைந்தாலோ, கூடினாலோ லட்டின் சுவையும் தன்மையும் மாறிவிடும் என்பதால் ஒவ்வொரு முறையும் தயாரிப்பு முறை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

“மனோஹரம்’ என்ற பெயரில் லட்டு பிரசாதம் அறிமுகப்படுத்துவதற்கு முன் ஏழுமலையானுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்தான் நைவேத்தியமாக படைக்கப்பட்டது. வெல்லம் கலந்த இந்த பிரசாதத்தை பக்தர்கள் மிகவும் விரும்பினர். 1940-ஆம் ஆண்டு வெங்கடேஸ்வரா நித்திய கல்யாணம் நிகழ்ச்சியின்போது மலையளவு பெரியதான “கொண்டந்தா’ லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்து சம்பிரதாயப்படி திருமணத்தின்போது லட்டு பரிமாறுவது வழக்கமாகும். இந்த சம்பிரதாயப்படி திருப்பதி தேவஸ்தானம் கடவுளுக்கு படைப்பதற்காக பெரிய அளவில் லட்டுகளை தயாரித்தது. நீண்ட காலமாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் சனிக்கிழமைகளில் மட்டும் வழங்கப்பட்டது. கல்யாண மகோத்ஸவம் மற்றும் தர்ம தரிசனம் ஆகியவற்றுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரே அளவிலான லட்டுகளை விநியோகிப்பதை நிர்வாகம் விரும்பவில்லை. எனவே கல்யாண மகோத்ஸவத்தில் பெரிய அளவிலான லட்டு வழங்கப்பட்டது. பக்தர்களின் விருப்பப்படி தினசரி லட்டு விற்பனை எப்போது துவங்கப்பட்டதென்ற தகவல் ஏதும் இல்லை.

துவக்கத்தில் இந்த லட்டு தயாரிப்பு பணிகள் “மிராசிதார்’ என்பவர்கள் கண்காணிப்பில் நடந்து வந்தது. லட்டு தயாரிப்பவர்களை “காமிகர் மிராசிஸ்’ என்று குறிப்பிட்டதோடு நாள்தோறும் தயாரிக்கும் மொத்த லட்டுகளில் 51 லட்டுகள் இந்த மிராசி பிராமண குடும்பங்களுக்கு வழங்க வேண்டுமென்ற கட்டாயமும் இருந்தது. இந்த முறையை திருப்பதி தேவஸ்தானம் உச்சநீதிமன்றத்தின் மூலம் சட்டரீதியாகத் தடை செய்தது.

விறகுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்த லட்டுகள், 1984-ம் ஆண்டிலிருந்து எல்பிஜி முறைக்கு மாறியது. பின்னர் பக்தர்களின் தேவை அதிகரிக்கவே மேலும் ஒரு சமையலறை கட்டப்பட்டு லட்டு தயாரிப்பு ஒரு லட்சத்திலிருந்து கூடுதலாக 70 ஆயிரம் அதிகரிக்கப்பட்டது. உகாதி போன்ற சிறப்பு நாட்களில் கடவுளுக்கு படைப்பதற்காக விசேஷ லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றும் நாள்தோறும் ஏழுமலையானுக்கு படைக்க கோவிலுக்குள் உள்ள நவீன சுகாதார சமையலறையில் 32 கிலோ எடையில் லட்டு தயாரிக்கப்படுகிறது.பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு நூறு கிராம் எடையுள்ளதாகும். இதன் தயாரிப்பு செலவு ஒன்றுக்கு ரூ.13 ஆகிறது

https://www.youtube.com/watch?v=UNeL8JoOh1Q

error: Content is protected !!