வளைகுடா பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சாகர்’ புயலாக மாறியது: ஆனாலும் தமிழகத்தில் நோ மழை!. – AanthaiReporter.Com

வளைகுடா பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சாகர்’ புயலாக மாறியது: ஆனாலும் தமிழகத்தில் நோ மழை!.

ஹாட்-டான வெயிலின் வெப்பத்திற்கு இடையே  அரபிக் கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சாகர்’ புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், செய்தியாளர்களிடம் நேற்று  விவரித்த போது, “அரபிக் கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு ‘சாகர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல், ஏமன் நாட்டுக்கு கிழக்கே சுமார் 400 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. .

எனவே, அடுத்து வரும் 2 நாட்களுக்கு மீனவர்கள் தென்மேற்கு அரபிக் கடலில் ஏடன் வளை குடாவை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ‘சாகர்’ புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு ஏதுமில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கோடை மழை பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., தருமபுரி, சேலம் மாவட்டம் வாழப்பாடி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

‘சாகர்’ பெயர் காரணம்

கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகள் பெயரிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏடன் வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள புயலுக்கு ‘சாகர்’ என இந்தியா பெயரிட்டுள்ளது. ஹிந்தி மொழியில் சாகர் என்பதற்கு ‘கடல்’ என்று பொருளாகும்.