தொட்ரா – திரை விமர்சனம்! – AanthaiReporter.Com

தொட்ரா – திரை விமர்சனம்!

நவீன மயமாகி விட்டதாக சொல்லப்ப்படும் நம் சமுதாயத்தில் காலம் காலமாக சாதி ரீதியான ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருகின்றன. என்னதான் சாதி, மத பிரிவினைகளில் தீண்டாமைகளில்  எக்கச்சக்கமான புரட்சிகள் நடந்தாலும், அனைவரையும் சமமாக பார்க்கும் சமத்துவ பார்வை பல மனிதர்களிடத்தில் இன்று பரவியிருந்தாலும், இன்னமும் பல்வேறு இடங்களில் சாதி ரீதியான தீண்டாமை, வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் மாதிரியான விஷயங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாக நம் தமிழகத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் தான் உடுமலைப் பேட்டை சங்கர் படுகொலை. அது போன்ற கலப்பு திருமணத்தாலும், கலப்பு காதலாலும் தமிழகத்தில் நடந்த மேலும் சில ஆணவக் கொலை சம்பவங்களை மையமாக வைத்து ’தொட்ரா’ என்ற பட திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் மதுராஜ், ஆணவக்கொலைகள் பின்னணியில் ஜாதி பாகுபாடு மட்டும் இன்றி, வேறு சில காரணங்களும் இருக்கிறது, என்பதை கூற முயன்றிருக்கிறார். நல்ல விஷயம்தான்..!

அதாவது வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவர் ஹீரோ பிரித்விராஜ், தன் கைச் செலவுக்காக அதி காலை வீடுகளுக்கு பேப்பர் போட்டு பிழைப்பு நடத்துபவர் கண்ணில் வழக்கம் போல் வசதியான வீட்டு பெண்ணான ஹீரோயின் வீணா படுகிறார். ஒரே கல்லூரில் படிக்கும் அவர்களுக்கு காதலும் பிறந்து இறக்கைக் கட்டி வளர்ந்துக் கொண்டிருக்கிறது,

இதனிடையே நாயகி வீணாவின் அப்பா கஜராஜ் மற்றும் அண்ணன் எம்.எஸ்.குமார் ஒரு ஜாதிக் கட்சியை சேர்ந்தவர்கள். மிருகத்தனமான ஜாதி வெறியோடு இருக்கும் இவர்கள் வேறு ஜாதியை சேர்ந்த இருவர் இணைவதையே தடுப்பத்தையே பிழைப்பாக செய்து வருகிறார்கள்.

அப்பேர்ப் பட்ட அண்ணன் & அப்பா-வுக்கு தங்கள் வீட்டு பொண் வீணாவின் காதல் தெரிய வருகிறது. இதையடுத்து உடனடியாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு முன்பாக வீணா, பிரித்விராஜனுடன் ஓடிவிடுகிறார். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் கஜராஜ் இறந்துவிடுகிறார்.

பின்னர் அவர்களை தேடி பிடிக்கும் எம்.எஸ்.குமார் வீணாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட, நிர்கதியான நாயகன் ஏ.வெங்கடேஷ் தானே முன் வந்து உதவி செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர் காதல் மனைவியை மீட்கும் சூழலில் ஏ.வெங்கடேஷ் மூலமாகவே புது பிரச்சினை வருகிறது. கூடவே எம்.எஸ்.குமார் அண்ட் கோ அவர்களை கொலைவெறியுடன் தேட, முடிவு என்னானது என்பதுதான் இந்த்‘தொட்ரா’ படத்தின் கதை.

நாயகன் (உடுமலை) சங்கர் என்ற பெயர் கொண்ட பிரித்விராஜ் தன் பங்கை முடிந்த அளவு சிறப்பா கவே அளித்திருக்கிறார். அறிமுக நாயகி வீணா எடுப்பான தோற்றத்தோடும், எதார்த்தமான அழகோடும் கவர்கிறார். ஹீரோயினின் அண்ணனாக வில்லனாக வரும் அறிமுக நடிகர் எம்.எஸ். குமாரின் வேடமும், அவரது நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் பேசும் வசனங்கள், எல்லாம் யதார்த்தம். இளம் வயசு பையங்களுக்கு செலவுக்கு காசு கொடுத்து காதலிக்க வைக்கு ஏ. வெங்கடேஷ் ரோல் சினிமாவுக்கு புதுசு.. ஆர்.என்.உத்தமராஜா இசை காதுக் கொடுத்து கேட்கும்படியாகவே இருக்கிறது. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு திரைக் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

சாதி என்கிற அரசியல் கட்சிகளின் `சதி` சாதாரண மக்களின் வாழ்க்கையைச் சூழ்ந்து பெருந் துன்பம் விளைவித்து வருகிறது என்றும் காதலிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களைப் பற்றி அல்லது தங்களது காதல் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள், அதே சமயம் இக்காதலால அவர்களது குடும்பங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதையும் சொல்லியிருப்பவர், இளம் காதல் மோகத்தால் பெற்றோர்கள் பேச்சை கேட்காதவர்கள் குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் பேசி அறிவுரையும் கூறியிருக்கிறார். கூடவே,இது போன்ற கலப்பு காதலுக்கு பின்னணியில் காசு, பணம், துட்டு, மணி..மணி என்ற ரேஞ்சில் வியாபாரமும், அரசியலும் இருப்பதாக கோடிட்டிக் காட்டி இருக்கிறார்.

ஆனாலும் ஆரம்பத்தில் சொன்னது போல் எடுத்துக் கொண்ட கதைக்கு தேவையான ஆழமான வசங்கள் அல்லது காட்சிகள் இல்லாமல் சொல்ல வேண்டியதை ஏதேதோ காரணத்தால் பூசி முழுகி சொல்வதும் சலிப்பைத் தந்தாலும் இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான அதே சமயம் பலரும் தொட தயங்கும் சப்ஜெக்டை வைத்து எடுக்கப்பட்ட ’தொட்ரா’படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

மார் 5 / 3