தொடரி…! – திரை விமர்சனம்

தொடரி…! – திரை விமர்சனம்

கதையை மட்டுமல்ல… அந்தக் கதை புழங்கும் ஏரியாவையும், அதற்குள் கேரக்டர்கள் நடமாடும் விதத்தையும் உருவாக்கும் சுதந்திரம் என்றுமே படைப்பாளிக்கு உண்டு. கிரியேட்டர் படைக்கும் இந்த ஃபேன்டஸி உலகத்தினுள் கண்ணை மூடிக் கொண்டு நுழைவது மட்டுமே பார்வையாளனின் வேலை. அதன் பிறகு படைப்பாளி உருவாக்கிய ஃபேன்டஸி உலகம் நம்பும்படி இருக்கிறதா என்று மட்டுமே அவன் பார்க்கிறான். இல்லாதபோது கேள்வி கேட்கிறான் அல்லது நெளிகிறான்.

thodari sep 23

‘தொடரி’ அப்படியான ஒரு ஃபேன்டஸி உலகம். நிற்காமல் வேகமாக ஓடும் ரயிலின் கூரையில் எப்படி தனுஷ் நிற்கிறார் என்ற கேள்வி இங்கு அவசியமில்லை. பூச்சியப்பன் என்கிற தனுஷால் அப்படி நிற்க முடியும் என்கிறார் கதாசிரியர் பிரபு சாலமன். இந்த வித்தை கைக் கூடிய ஒரு கதாபாத்திரம், தான் காதலிக்கும் சரோஜாவையும் பயணிகளையும் காப்பாற்ற எதற்காக க்ளைமாக்ஸ் வரை காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி படம் பார்க்கும்போதே எழுவதுதான் மிகப்பெரிய பலவீனம். 

போலவே சேனல்கள் அபத்தமாக செயல்படுகின்றன என்று சொல்ல நினைத்தவர், தான் படைத்த ஃபேன்டஸி உலகத்துக்குள்ளேயே ஏராளமான அபத்தக் காட்சிகளை வைத்திருக்கிறார். உதாரணம்: மரணம் நிச்சயம் என்று மனநிலையிலும் வாக்கி டாக்கியில் சினிமாவில் பாட்டுப் பாட வாய்ப்பு கேட்கும் சரோஜா.

167 நிமிடங்கள் என்பது ரொம்பவே நீளம். அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்த முதல் 50 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும் திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது.

தனக்கென்று ஒரு இமேஜை, மார்கெட்டை உருவாக்கிக் கொண்ட பிறகும் எல்லா காட்சிகளிலும் தானே தோன்ற வேண்டும் என்று நினைக்காமல் மற்றவர்கள் நடிக்கவும் வழி விட்டிருக்கும் தனுஷ் என்னும் கலைஞன், கவர்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முந்தையை ப்ளாக்கில் கீர்த்தி சுரேஷ் ஸ்கோர் செய்ய அனுமதித்திருப்பதை குறிப்பிடலாம்.

ஹாலிவுட் தரத்துடன் ஒப்பிட்டால் சிஜி சுமார் என்று தோன்றும். ஆனால், உள்நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் இதை செய்திருக்கிறார்கள் என்ற கோணத்தில் பார்த்தால் வியப்பு ஏற்படுகிறது. நாம் வளர்கிறோம்!

கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரணும், தறிகெட்டு ரயில் வேகமாக ஓடுவதற்கான காரணமும் பக்கா. போலவே என்ன ஏது என்று அறியாமலேயே தீவிரவாதிகள்… மத்திய அமைச்சர் கடத்தப்பட்டிருக்கிறார்… என்றெல்லாம் காட்சி ஊடகங்கள் முடிவு கட்டி விவாதம் நடத்தும் விதத்தை அழகாகவே இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.

என்ன… முதல் காட்சியில் இருந்தே கதையை ஆரம்பித்திருக்கலாம். இருபது பேருக்கு மேல் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள் என்கிறது டைட்டில் கார்ட். அனைவருக்கும் பாராட்டுக்கள். ரயில்வே தொடர்பான டேட்டாக்களை துல்லியமாக சேகரித்துக் கொடுத்ததற்காக.

ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர்… என அனைவருமே தங்கள் முத்திரையை பதித்திருக்கிறார்கள்.

இதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு ஏரியாவில் ‘தொடரி’ வலது காலை எடுத்து வைத்து நுழைந்திருக்கிறது. இனி அடுத்தடுத்து பலரும் இந்த மாதிரியான ஃபேன்டஸிகளை காட்சிப்படுத்துவார்கள். அதற்கெல்லாம் முன்னோடியாக இப்படம் இருக்கும். நேர்மறையாகவும் எதிர்மறையாகவும்.

‘Speed’, ‘Unstoppable’ என்ற இரு ஹாலிவுட் படங்களும் ‘தொடரி’யை பார்க்கும்போது நினைவுக்கு வருகின்றன. இதில், முந்தையது ப்ளாக்பஸ்டர். பிந்தையது டிஸாஸ்டர்.இந்த இரு எதிர் எதிர் துருவங்களும் ‘தொடரி’யில் பயணிக்கின்றன என்பது தற்செயலானதல்ல.

கே.என்.சிவராமன்

 

error: Content is protected !!