திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு! – AanthaiReporter.Com

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பலத்த சலசலப்புக்குகளுக்கிடையே திருவாரூர் தொகுதிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதே சமயம் எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு தீர்ப்பால் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். அதேபோல், கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக நிறைவுபெறாத நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என தமிழக அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆனாலும் இந்த தேர்தல் அறிவிப்பை அடுத்து அதற்கான வேலைகளில் தமிழக அரசியல் கட்சிகள் வேகம் காட்டத் தொடங்கி விட்டன. அ.ம.மு.க சார்பில் எஸ்.காமராஜும், தி.மு.க சார்பில் பூண்டி கலைவாணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டு இருக்கிறார்கள். அதேபோல், அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் நேர்காணல் முடிந்துள்ள நிலையில், இன்று வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

அதே சமயம் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. `கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலையில், அங்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்’ என அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

இதை அடுத்து திருவாரூர் தொகுதியில் இடைதேர்தல் நடத்துவதற்கான சாதக பாதகங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். உடனே இது தொடர்பாக அனைத்துகட்சி பிரமுகர்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, திருவாரூர் தொகுதி இடைதேர்தல் இப்போது வேண்டாம் என அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துகட்சிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பான அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிவைத்தார். அதில், திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் தேர்தல் பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது.