திருமுருகன் காந்தி ஜாமீனில் ரிலீஸ்! – AanthaiReporter.Com

திருமுருகன் காந்தி ஜாமீனில் ரிலீஸ்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி 52 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர், வேலூர் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வேயிலிருந்து கடந்த 9 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்த அவரை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி காவல்துறை யினர் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து சிறையில் அடிப்படை வசதிகள் எதுவும் கொடுக்கப்படாமல் காவல் துறையினரால் பலவித கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார். இதனால் இவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு ஓரளவு உடல் நிலம் தேறியது.

ஆனால் இன்னும் முழுவதுமாக சரியாகவில்லை. அதற்கான மருத்துவ சிகிச்சைக்கும் காவல் துறை முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில் 52 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு திருமுருகன் காந்தி இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மே 17 இயக்க உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து சிறையிலிருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி நேராக சென்று பெரியார் சிலைக்கும், அம்பேத்கார் சிலைக்கும், மேளதாளத்துடனும் கரகோஷத்துடனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.