நீங்க சிப் வச்ச டெபிட் / கிரெடிட் கார்டுக்கு மாறிட்டீங்களா? இல்லேன்னா உடனே மாறிடுங்க! – AanthaiReporter.Com

நீங்க சிப் வச்ச டெபிட் / கிரெடிட் கார்டுக்கு மாறிட்டீங்களா? இல்லேன்னா உடனே மாறிடுங்க!

வரவிருக்கும் 2019 ஜன 1 முதல் புதிய ‘சிப்’ பொருத்தப்பட்ட, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

card

கடந்த 2008-க்கு முன்னர் இந்திய வங்கிகள் வழங்கிய யூரோ பே, மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ரக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிம் கார்டு போன்று இருக்கும் சிப் பொருத்தப்படவில்லை. ஆனாலும் அதன் பின்னர் சில வங்கிகளாலும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கார்டுகளிலும் மேக்னடிக் ஸ்டிரைப் மட்டுமே உள்ளது. இதை எளிதில் ஸ்கிம்மர் கருவிகள் மூலம் மாற்றிவிட முடியும் ஆகவே தான் வங்கிகள் சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை பயணாளகளுக்கு விநியோகிக்க கடந்த 2015-ம் ஆண்டு முதலே வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

இதனிடையே நாட்டில் சமீப காலமாக இந்த ‘டெபிட், கிரெடிட்’கார்டுகள் மூலம், ஏராளமான மோசடிகள் நடக்கின்றன.இதை தடுக்கும் நோக்கில், அனைத்து வங்கிகளும் கண்டிப்பாக் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, ‘சிப்’ பொருத்தப்பட்ட, புதிய, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளை வழங்கும்படி 2015 ஆகஸ்டிலேயே ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, மூன்று ஆண்டுகள் அவகாசமும் அளிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் பழைய ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளுக்கு பதில் புதிய ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளை டிச., 31க்குள் பெற்றுக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களை எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் அறிவுறுத்தியது. இதன்படி, இந்த வங்கியின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புதிய ‘சிப்’ பொருத்தப்பட்ட ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளை பெற்று வருகின்றனர்.

இது போல் இதர வங்கிகளின் வாடிக்கையாளர்களும் புதிய கார்டுக்கு மாறிவருகின்றனர்.
‘ ஆக ‘சிப்’ இல்லாத, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள், 2019 ஜன., 1 முதல் செயல்படாது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், புதிய, ‘சிப்’ பொருத்தப்பட்ட ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள் கோரி விண்ணப்பிக்கலாம்; அல்லது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். புதிய, ‘சிப்’ பொருத்தப்பட்ட கார்டு, இ.எம்.வி.,எனப்படும், ‘யூரோபே, மாஸ்டர் கார்டு, விசா கார்டு’ என, அழைக்கப்படுகிறது.