“ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால்..!

“ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால்..!

எங்கள் காலத்தில் பார்லிமெண்டுக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத் தான் தேர்தல் நடந்து வந்தது. 52ல் துவங்கிய முதல் தேர்தலிலிருந்து 67 வரை அப்படித்தான். இவற்றில் 67 தேர்தலில் நாங்கள் கல்லூரி மாணவர்கள் நேரடியாகக் களப் பணி ஆற்றினோம். காங்கிரசுக்கு எதிராக எங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தலைவர்கள் முனைவர் மு. நடராசன், கா.காளிமுத்து, விருதுநகர் சீனிவாசன். கவிஞர் நா.காமராசன் ஆகியோர் எங்கள் முன்னோடிகள். அந்தத் தேர்தலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டது. அண்ணா முதல்வர் ஆனார். அதற்கு எங்கள் பங்கும் காரணம்.

பார்லிமெண்டுக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் நடந்தால் மாநிலப் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்படும் என்று சிலர் வாதாடுகிறார்கள். எனது பார்வை அது அல்ல. 71, 85, 91, 96, இப்படி ஒன்றாகத் தேர்தல் நடந்த எந்த வருடங்களை எடுத்துக் கொண்டாலும் தமிழக வாக்காளர்கள் மாநிலத்திற்கு யார் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் டிவிக்களும், சமூக வலைதளங்களும் தோன்றாத காலம். எனவே இன்றைய காட்சி மற்றும் சமூக ஊடகப் பெரு வெடிப்புச் சூழலில் பார்லிமெண்டுக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் நடந்தால் வாக்காளர்கள் மாநிலப் பிரச்னைகளை மறந்துவிடுவார்கள் என்பதில் அர்த்தமில்லை.

கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் ஒன்றாகத் தேர்தல் நடந்தால் காவிரிப் பிரச்னையில் தங்கள் நிலை என்ன என்பதைத் தேர்ல்வாகச் சொல்ல வேண்டிய சூழல் தேசியக் கட்சிகளுக்கு ஏற்படும்

ஜஸ்டிஸ் பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான கமிட்டி 1999லிலேயே பார்லிமெண்டுக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் நடத்தப் பரிந்துரை செய்துள்ளது.

இதற்காகப் பிரதமருக்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பரிந்துரைக் கடிதம் அனுப்பியது இப்போது வெளிவந்ததும் இந்தச் சர்ச்சை மீண்டும் தமிழகத்தில் எழுந்துள்ளது.

இப்படி “ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால் செலவு குறையும். தேர்தல் நன்னடத்தை விதி அமல் என்ற பெயரில் மக்கள் பணிகள் பின்னுக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம்.

ஷ்யாம் 

error: Content is protected !!