உலகில் எந்த பந்தமும் நிலையில்லை!- துறவறம் புகுந்த சென்னை ஜைன இளம்பெண்!

உலகில் எந்த பந்தமும் நிலையில்லை!- துறவறம் புகுந்த சென்னை ஜைன இளம்பெண்!

ஒரு அரசன், “”இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என ஒரு துறவியிடம் கேட்டான்.

“”நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே” என்று அவர் பதில் கூறினார்.

அரசனுக்கு புரியவில்லை.

“”வா! என் கருத்தை விளக்குகிறேன்,” என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார்.

வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்த சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க இருவரும் சென்றனர். ராஜகுமாரி அங்கு நின்ற ஒரு சந்நியாசியின் கழுத்தில் மாலையிட்டாள். சந்நியாசியோ, “”எனக்கேது குடும்ப வாழ்வு,” என்று சொல்லி மறுத்து விட்டு, வேகமாக வெளியேறினார்.

இளவரசியோ,””இவரைத் தவிர வேறு யாரையும் கனவிலும் கூட நினைக்க மாட்டேன்,” என்று அவரை பின்தொடர்ந்தாள். அரசனும், துறவியும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

எப்படியோ சந்நியாசி தப்பி விட்டார். பின் தொடர்ந்து வந்த துறவியையும், அரசனையும் பார்த்த ராஜகுமாரி, தன் கதையைக் கூறினாள். அவர்களும் ஏதும் அறியாதவர்கள் போல கேட்டனர். அப்பொழுது இரவாகி விட்டதால், அங்கேயே தங்கிவிட்டு, அடுத்தநாள் காலை செல்ல தீர்மானித்தனர்.

அவர்கள் தங்கிய இடத்தில் இருந்த ஆலமரத்தில், புறா ஒன்று தன் பெண் துணையோடும், குஞ்சுகளோடும் குடும்பம் நடத்தி வந்தது.

இவர்களைக் கண்டதும், ஆண்புறா “”நமது வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டார்கள். இரவோ, ரொம்பவும் குளிராக இருக்கிறது.

குளிர் காய இவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றது. மேலும் குச்சிகளையும் எடுத்து வந்து அவர்கள் அருகில் போட்டது.

அவர்கள் அவற்றை அருகில் கிடந்த சருகுகளுடன் சேர்த்து “தீ’ மூட்டி குளிர் காய்ந்தனர்.

அப்போது ஆண் புறா, மற்ற புறாக்களை நோக்கி, “”நாமே இல்லறத்தில் இருப்பவர்கள். விருந்தாளி களை சுகப்படுத்த வேண்டியது நமது கடமை. நம்மிடம் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை. என் உடம்பைக் கொடுத்தாவது இவர்களின் பசியைப் போக்குகிறேன்,” என்று சொல்லி, சற்றும் தாமதிக்காமல் எரியும் தீயில் விழுந்து உயிர்விட்டது. இந்த உண்மை தெரியாத அரசன் அதை எடுத்து சாப்பிட முற்பட்டான்.

அப்போது பெண்புறா, “”என் கணவரால் மட்டும் இந்த மூவரின் பசி எப்படி அடங்கும்? கணவன் செய்த தர்மத்தை மனைவி முழுதாக செய்ய வேண்டுமல்லவா!” என்றபடி தானும் தீயில் விழுந்தது.

இப்படி இரண்டு புறாக்களும் நெருப்பில் விழவே, அவர்கள் மூவரும் திகைப்படைந்தனர்.

துறவி, அந்த இரண்டு புறாக்களின் இல்லற தர்மத்தைப் பற்றி போற்றி, பாராட்டினார்.

அப்போது குஞ்சு புறாக்கள் இரண்டும், “”பெற்றோர் செய்த தான, தர்மத்தை பின்பற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை,” என்று சொல்லி அவையும் தீயில் விழுந்து மாண்டன. தர்ம ஆத்மாக்களான, அந்த புறாக்களை தின்ன அவர்களுக்கு மனம் வரவில்லை.

அடுத்தநாள் இளவரசியை அவளது தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, அரசனும் துறவியும் தமது ஊர் நோக்கி திரும்பினர். வழியில் துறவி அரசனிடம், “”சந்நியாசி என்றால், சுயம்வர சந்நியாசி யைப் போல தன்னை விரும்பி வலிய வந்த பெண், ராஜகுமாரி என்று தெரிந்தும் ஏற்காதது போல் இருக்க வேண்டும். இல்லறத்தான் என்றால், புறாக்களைப் போல் தங்கள் உயிரையும் ஒரு வருக்கொருவர் கொடுக்கத் தயங்கக்கூடாது,” என்று விளக்கினார். அரசனும் உண்மையை உணர்ந்தான்..

இதே உண்மையை புரிந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த மம்தா கட்டாரியா என்ற எம் பி ஏ படித்த பட்டதாரி இளம் பெண் ஒருவர் தனக்கு கிடைக்க இருந்த இல்லற வாழ்க்கையை துறந்து, ஸந்நியாசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்  . ஜெயின் சமூகத்தில் துறவறம் செல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சடங்கு. ஜெயின் குழந்தைகளுக்கு மகாவீரரின் போதனைகளைப் பற்றியும், துறவறம் பற்றியும் சிறுவயதில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்டாலும், தாங்களாக விரும்பி முடிவு செய்யும் போதுதான் துறவறம் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது குறித்து சென்னை அயனாவரத்தில் உள்ள டாடிபாடி ஜைன ஆலயத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் விவரித்து பேசிய போது, “ஜைன மதத்தின் தத்துவங்களை எடுத்து ரைப்பதற்காகவும், அதனை பரப்புரை செய்வதற்காக ஜைன துறவிகள் சுற்றுப் பயணம் மேற்கொள்வதுண்டு. அது போன்ற தருணங்களில் யாரேனும் துறவற வாழ்க்கையை வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர்களுக்கு தீக்ஷா வழங்கப்படும். அதனை மூன்று நாள் வைபவமாகக் கொண்டாடுவார்கள். அது போன்றதொரு விழா தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சென்னை தி நகரில் வசித்து வரும் மம்தா கட்டாரியா என்ற 29 வயது எம் பி ஏ படித்த பட்டதாரி பெண் சாதாரண லௌகீக வாழ்க்கையை புறந்தள்ளி துறவியாக வாழ உறுதி கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கு வருகைத் தந்திருக்கும் ஜைன மதத் துறவிகள் தீக்ஷா வழங்கி அவரை துறவியாக்குகிறார்கள்.

அதன் பிறகு அவர் குமாரி மம்தாவாக இருந்து சந்நியாசி மம்தாவாக மாறிவிடுவார். அத்துடன் துறவிகளுக்கான கட்டுப்பாட்டைக் கடை பிடிக்கத் தொடங்குவார். அதாவது தலையை மழித்து, வெள்ளை உடையை அணியவேண்டும். எங்கு சென்றாலும் கால் நடையாகவே செல்லவேண்டும். மாலை ஆறு மணிக்கு மேல் எதனையும் சாப்பிடக்கூடாது. நான்கு மாதத்திற்கு மேல் எங்கும் தங்கக்கூடாது. ‘வாழு வாழவிடு’ என்பது போன்ற ஜைன மதக் கருத்துகளை பரப்புரை செய்து கொண்டே யிருக்கவேண்டும்.

‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்’ என்ற திருக்குறளில் திருவள்ளுவர் , ‘ஒரு உயிரையும் கொல்லாமல், புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை, இந்த உலகத்திலிலுள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.’ என்று ஜைன மதத்தின் தத்துவங்களை அற்புதமாக சொல்லியிருப்பார். இதன் மூலம் ஜைன மதத்திற்கும், புத்த மதத்தினருக்கும் இடையே உள்ள சிறிய வேறுபாட்டையும் சுட்டி காட்டியிருப்பார் திருவள்ளுவர்.

இந்த ஆலயத்தில் இதுவரை மூன்று பெண்கள் துறவறம் மேற்கொண்டிருக்கிறார்கள். அதே போல் இது போன்ற வைபவத்தின் போது சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான ஜைனர்கள் இங்கு வருகைத்தந்து ஜைன துறவிகளிடம் ஆசி பெறுவார்கள்.’ என்றார்கள்.

error: Content is protected !!