இந்தியாவில் மகிழ்ச்சி குறைஞ்சிடுச்சு! – ஐ. நா. ரிப்போர்ட் – AanthaiReporter.Com

இந்தியாவில் மகிழ்ச்சி குறைஞ்சிடுச்சு! – ஐ. நா. ரிப்போர்ட்

பிறந்த ஒவ்வொரு மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் என்னென்ன இருக்க வேண்டும் என்ற ஒரு நீண்ட பட்டியலே நம்மிடம் உண்டு. பொதுவாகவே பணம் இருந்தால் அனைத்துப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அரச வாழ்வு வாழ்ந்த புத்தருக்கும் அந்த வாழ்வு மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரியவில்லை. அனைத்தையும் துறந்து விட்டுதான் வாழ்க்கையின் காரணம் அறிய விரும்பி ஞானத்தைத் தேடி அலைந்து, உடலை வருத்தித் தவம் இருந்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயன்றார் என்பதெல்லாம் ஏற்கெனவே தெரிந்த தகவல்தான். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என ஐநா தெரிவித்துள்ளது. அதிலும் இந்தியாவை விட பாகிஸ்தானில் மகிழ்ச்சி அதிகமாகவே இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 20) உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை யொட்டி நேற்று ஐநா உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை 2012ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்வறிக்கை, உலக மக்களின் சமத்துவம், வருமானம், சுதந்திரம், அரசின் மீதுள்ள நம்பிக்கை, மக்களின் ஆயுட்காலம் மற்றும் சமூக ஆதரவு உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன.

ஏழாவது முறையாக வெளியிடப்படும் இந்த அறிக்கையில், மகிழ்ச்சியான நாடாகப் பின்லாந்து இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 67ஆவது இடத்திலும், சீனா 93ஆவது இடத்திலும், வங்கதேசம் 125ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா கடந்த ஆண்டு இருந்த இடத்திலிருந்து 7 இடங்கள் சரிந்து 140ஆவது இடத்திற்கு வந்துள்ளது. மகிழ்ச்சி குறைந்த நாடாக தெற்கு சூடான் நாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனமகிழ்ச்சி என்பதற்கு இறுதி இலக்கு இல்லை. அது நகர்ந்து கொண்டே இருக்கும் அடைய முடியாத ஓர் இலக்கு. இதோ அடைந்துவிட்டோம் என்று நினைத்த சிறிது நாட்களில் அது நிறைவு தராத நிலையை நமக்குக் கொடுத்துவிட, மேலும் மகிழ்ச்சியைத் தேடி நம் பயணம் தொடர ஆரம்பிக்கும். கானல் நீர் போன்ற மகிழ்சியைத் தேடித் தேடி மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நமது முயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால்

மகிழ்ச்சி குறைவாக உள்ள நாடுகளில் எதிர்மறை எண்ணங்கள், கவலை, சோகம் மற்றும் கோபம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. ஒட்டுமொத்த உலக மகிழ்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.