உலகம் முதலில் அழியுமா? மனிதன் அழியப் போகிறானா? – ஐ.நா. ஆய்வறிக்கை! – AanthaiReporter.Com

உலகம் முதலில் அழியுமா? மனிதன் அழியப் போகிறானா? – ஐ.நா. ஆய்வறிக்கை!

கடந்த 50 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்துள்ளன, 10 லட்சத் துக்கும் அதிகமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. மேலும் மனித செயல்பாடு களால் புவியின் பல்லுயிர்த்தன்மையில் ஏற்படும் பாதிப்பினால் மனித இனத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகிறது என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.

இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று; மரம்செடிகள், பூச்சிகள் பறவைகள் முதல் நீருயிரிகள், வனவிலங்குகள் வரை அனைத்தும் மனிதனோடு உலகத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. பல்லுயிர்களும் அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற் கென்று அமைந்திருப்பதே இவ்வுலகம் ஆகும். நிலமும் நீரும் காற்றும் இவ்வுலகத்தின் அனைத்து வளங்களும் அனைவருக்கும் உரிமையுடையன என்ற நிலையை மறந்து, நாளைய மனிதர்க ளுக்கும், ஏன் தமது வழித் தோன்றல்களுக்கும் கூட அதனை விட்டு வைக்க நினையாமல் மனிதன் தனக்கே தனக்கென்று இவ்வுலகத்தை உரிமையாக்கிக் கொண்டு உலகின் வளங்களனைத்தையும் கைப்பற்றும் போதும் பிற உயிர்களின் உரிமைகளைக் கைக்கொள்ளும் போதும்தான் உயிரினச் சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இன்று உலகெங்கும் இதுகுறித்தான விழிப்புணர்வுதான் பேசு பொருளாகியிருக்கிறது.

ஆம்.. மனித இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை ஐநா வெளியிட்டு இருக்கிறது. மனித இனம் அழிவை நோக்கிச் செல்வதற்கான காரணங்களாக பருவ நிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். தண்ணீர் தண்ணீர் என தகிக்கும் கோடை வெப்பத்திற்கு மக்கள் குடிநீர் தேடி அழையும் சூழல் கூட பருவ நிலை மாற்றத் தினால் தான் உருவானது. பருவமழை பொய்த்ததாலும், நீர் நிலை ஆக்கிரமிப்பு, வெயிலில் வறண்டு போகும் நதிகள் என மக்களுக்கு போதிய நீர் கிடைப்பத்தில்லை.

தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் காவிரி வறண்டு வருவதற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அரசின் வளர்ச்சி திட்டங்களால் காடுகள் அழிந்து வருவது ஒரு முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். உலகில் உள்ள 35 பல்லுயிர் மண்டலங்களில் பாதுகாக்க வேண்டிய பகுதியாக மேற்கு தொடர்ச்சிமலை உள்ளது. இந்த இயற்கை மாசுபாடு உலகை அழிவுக்கே கொண்டு போகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசங்கங்களுக்கு இடையேயான அறிவியல் கொள்கை மன்றம் சார்பாக 50 நாடுகளை சேர்ந்த 145 சூழலிய ஆய்வாளர்கள் ஜக்கிய நாடுகள் கூட்டமைப்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ததனர். அந்த ஆய்வு முடிவுகள் நாம் உலகம் அழிவின் விளிம்பில் இருப்பதாக சொல்கிறது. அதாவது இப்போது நடைபெறும் இயற்கை சுரண்டல் தொடருமேயானால் இன்னும் 150 ஆண்டுகளில் சுமார் 75% உயிரினங்கள் அழிந்துவிடும் என்றும் இந்த அறிக்கை குறிப்பி டுகிறது.

இந்த ஆய்வையொட்டி எந்தெந்த உயிரினங்கள் அழிவின் அருகே இருக்கின்றன என் பதைக் கண்டறிய ஒரு லட்சம் உயிரினங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பது இப்போது வரை கண்டறியப்பட்டது. இந்த மதிப்பீடு இன்னும் முழுமையாக முடியவில்லை என்பது நினைவில்கொள்ளத்தக்கது. குறிப்பாக அமுர் சிறுத்தை, கறுப்பு காண்டாமிருகம், போர்னிய உராங்குட்டான், கிராஸ் ரிவர் கொரில்லாக்கள், சுமத்ரா யானை ஆகிய 5 விலங்குகளும் அழிவின் உச்ச அபாயத்தில் உள்ளன.

இது சூழலில் உள்ள பல்லுயிர்த்தன்மையை பாதித்து மனிதர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதற்கு முன்னால் 5 முறை உயிர்களின் பேரழிவும் மனித இனம் தோன்றுவதற்கு முன்னர் நடைபெற்றது. இந்த பேரழிவின் காரணமாக அறிஞர்கள் சொல்வது தீவிர பனிக்காலம், ஆக்சிஜன் பற்றாக்குறை, விண்கற்கள் மோதல் மற்றும் எரிமலை வெடிப்பு. ஆனால் இம்முறை ஏற்பட உள்ள உயிர்கள் பேரழிவுக்கு மனிதர்கள் தான் காரணமாக இருப்பார்கள் என்கின்றனர் அறிஞர்கள்.

மனிதர்கள் ஊடுருவலால் நிலம் மற்றும் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம், உயிரினங்கள் வேட்டை மற்றும் கடத்தல், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுப்பாடு மற்றும் அந்த சூழல் மண்டலத்தை சாராத அன்னிய உயிரினங்கள் இந்த ஐந்து காரணிகளால் உயிரிபல்வகைமை பாதிப்புக்கு உள்ளா கிறது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அழிவில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்காக இயற்கையின் நுகர்வு அதிகரித்து உள்ளது நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இயற்கை வளத்தை பண்டமாக மதிப்பிடுவது அதன் வளத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். மனிதனின் செயல்பாடு, இயற்கை, விலங்குகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், அவனது சொந்த அழிவுக்கும் காரணமாக இருக்கிறது. நிலத்தைச் சீரழித்ததால் சுமார் 300 கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.

மனிதனின், இயற்கைக்குப் பொருந்தாத விவசாய முறை, பாதிப்புக்கு ஒரு முக்கியக் காரணம்.
உலகின் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள 1.20 கோடி எக்டேர் பரப்பளவு காடுகள் 2018-ம் ஆண்டு மட்டும் அழிந்துள்ளன. அதாவது ஒரு நிமிடத்துக்கு 30 கால்பந்து மைதானத்தின் பரப்பளவு என்றால், நேர்ந்துவரும் விபரீதம் புரியும்.

வரும் 2020ல் சீனாவில் நடைபெற உள்ள பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இந்த அறிக்கை அடிப்படையில் முக்கிய கொள்கைகள் வகுக்கப்பட உள்ளது. இவ்வளவு நாட்களாக இயற்கையை பயன்படுத்தி பலன்களை அனுபவித்த மனித இனம் தனது எதிர்கால சந்ததிக்கு எதைத் தரப் போகிறது என்பதற்கு அந்த மாநாடு விடை தர வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கிறது.